விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 3000 மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் சசிகலா. இவர் மாணவிகளைப் படிப்பில் உற்சாகப்படுத்துவதற்குப் பல்வேறு வழிமுறைகளைச் செயல்படுத்தி வருகிறார். இது மாணவிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அந்த வகையில், தலைமை ஆசிரியர் சசிகலா காலாண்டுத் தேர்வில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண் பெறும் மாணவிகளுக்கு விருது வழங்கப்படும் என்று அறிவித்து மாணவிகளை ஊக்கப்படுத்தி உள்ளார். இதனால் காலாண்டுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறுவதற்காக மாணவிகள் மிகவும் தீவிரமான முறையில் படித்து வந்தனர். இந்த தேர்வில் விழுப்புரம் ஜிஆர்டி தெருவைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி லோகிதா 600-க்கு 581 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா மற்றும் பள்ளியில் பணி செய்யும் சக ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பேசி அதிக மதிப்பெண் எடுத்த மாணவிக்கு ஒரு நாள் முழுவதும் தலைமை ஆசிரியர் பொறுப்பை வழங்குவதாக முடிவெடுத்தனர். அதனடிப்படையில், அந்த மாணவியைத் தலைமை ஆசிரியர் இடத்தில் அமர வைத்து, அதோடு தலைமை ஆசிரியை செய்யும் பணியைச் செய்யுமாறு உற்சாகப்படுத்தினர். மாணவியும் ஒவ்வொரு வகுப்பறைக்கும் சென்று சக ஆசிரியர்களிடம் பாடம் நடத்தும் விபரம் கேட்டு அறிந்தார். அதேபோல், மாணவிகளிடமும் கல்வி எப்படி கற்க வேண்டும், எப்படி முனைப்புடன் பாடத்தைப் படிக்க வேண்டும் என்பது குறித்தும் கலந்துரையாடினார்.
இதனைத்தொடர்ந்து மதிய உணவு சமைக்கும் இடத்திற்குச் சென்று அங்கு உணவு தரமாகவும், சுகாதாரமாகவும் சமைக்கப்படுகிறதா என்பது குறித்தும் பார்த்துக் கேட்டறிந்தார். திரைப்பட பாணியில் ஒரு நாள் முதல்வரைப் போல மூவாயிரம் மாணவிகள் படிக்கும் பள்ளியில் ஒரு மாணவி தலைமை ஆசிரியை பொறுப்பு ஏற்று ஒரு நாள் முழுவதும் தலைமை ஆசிரியராக இருந்து பணி செய்தது சக மாணவிகள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து மாணவி லோகிதா, "ஒரு நாள் தலைமை ஆசிரியர் பணி ஏற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்னைப்போல் மற்ற மாணவிகளுக்கும் இது போன்ற எண்ணம் வர வேண்டும். பள்ளி பாடத்திட்டத்தில் தேர்ச்சியில் சாதனை படைக்க வேண்டும் என்று மாணவிகளின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் எங்கள் தலைமை ஆசிரியரின் செயல்பாடுகள் உள்ளன. அது எங்கள் மாணவர்களுக்கு மிகவும் சந்தோஷமாகவும் திருப்திகரமாகவும் அமைந்துள்ளது" எனக் கூறியுள்ளார். தலைமை ஆசிரியரின் இந்த முயற்சி கல்வித்துறை அதிகாரிகள், சக ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.