திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பிச்சம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் பிள்ளையார்கோவில்பட்டி, அரியாக்கவுண்டம்பட்டி, பிச்சம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 113 மாணவர்கள் படித்துவருகின்றனர். அதேபோல் பிள்ளையார்கோவில்பட்டியைச் சேர்ந்த குழந்தைவேல் மகன் பாலாஜி (வயது 11) ஆறாம் வகுப்பு பயின்றுவருகிறான்.
நேற்று (20.12.2021) மதிய உணவு இடைவேளையின்போது பள்ளியின் கழிவறைக்குச் சென்ற பாலாஜி, கழிவறையின் கதவைத் திறந்தபோது சுவரில் இருந்து துளை வழியாக வந்த பாம்பு, மாணவனின் கையில் கடித்தது. உடனே மாணவன் சப்தம் போடவே, ஆசிரியர்கள் மாணவனை மீட்டு சிகிச்சைக்காக புத்தாநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிக்சைக்கு சேர்த்தனர். பின் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில், சம்மந்தப்பட்ட கழிவறையின் முன்பு இருந்த செடிகளைத் தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணியாளர்கள் அகற்றினர்.
பள்ளிக்குச் சுற்றுசுவர் இல்லாத நிலையில், பள்ளியின் பின்புறம் அதிக அளவில் புதர்கள் மண்டியிருப்பதால்தான் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்ததாகவும், பள்ளிக்குச் சுற்றுசுவர் அமைத்துத் தந்திட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளியில் மாணவனைப் பாம்பு கடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.