சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த மாணவி ரஞ்சிதா. 19 வயதான இவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இசைக்கலைகளில் அதிக ஆர்வம் கொண்டுள்ள ரஞ்சிதா ஏராளமான கலை நிகழ்ச்சிகளுக்கு சென்று தனது திறமையை வெளிப்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிக்காக மாணவி ரஞ்சிதா தனது சொந்த ஊரான திருப்புவனத்தில் இருந்து பறை இசைக்கருவிகளை கல்லூரிக்கு கொண்டு வந்துள்ளார். இதற்காக சிவகங்கையில் இருந்து கிளம்பிய ரஞ்சிதா பறை இசைக்கருவிகளை அரசு பேருந்தில் தான் எடுத்து வந்துள்ளார். அவரது கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் நடந்து முடிந்த பிறகு, அன்று மாலை தன்னுடைய சொந்த ஊருக்கு செல்வதற்காக இசைக்கருவிகளை எடுத்துக்கொண்டு, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திற்கு ரஞ்சிதா வந்துள்ளார். மதுரைக்கு செல்லும் பேருந்தில் ஏறிய ரஞ்சிதா ஓட்டுநர் அனுமதியுடன் தனது இசைக்கருவிகளுடன் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தார்.
சிறிது நேரம் கழித்து டிக்கெட் கேட்டு வந்த நடத்துநர், “ஏம்மா.. என்னது இதுலாம்.. இந்த பொருளெல்லாம் பஸ்ல ஏத்த முடியாது. எல்லாத்தையும் எடுத்துட்டு கீழே இறங்கு” என ரஞ்சிதாவை அதட்டியுள்ளார். அதற்கு பதிலளித்த ரஞ்சிதா, "அண்ணே.. இந்த பொருள் எல்லாத்துக்கும் நான் டிக்கெட் எடுக்குறேன். ப்ளீஸ், நீங்க கத்தாதீங்க" என தன்மையோடு பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நடத்துநர், "இந்த பஸ்ஸு பேஸஞ்சர் போறதுக்கு மட்டும் தான். இந்த கருமத்தெல்லாம் ஏத்திட்டுப் போக முடியாது. மரியாதையா கீழ இறங்கு" என தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் திகைத்துப்போன மாணவி ரஞ்சிதாவை வண்ணாரப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் கீழே இறக்கிவிட்டுள்ளார்.
இத்தகைய சூழலில் தனியாக அழுதுகொண்டிருந்த மாணவி ரஞ்சிதாவிடம் செய்தியாளர்கள் சிலர் சென்று என்ன நடந்தது எனக் கேட்டபோது, அந்த மாணவி நடந்த விஷயத்தை அழுதுகொண்டே கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த செய்தியாளர்கள், அந்த மாணவியிடம் நடந்தவை குறித்து முழுமையாகக் கேட்டுக்கொண்டு வேறொரு பேருந்தில் ஏற்றிவிட முயன்றனர். ஆனால், அங்கு எந்த பேருந்தும் வரவில்லை. அதன்பிறகு, அரைமணி நேரம் கழித்து அந்த வழியாக வந்த கோயம்புத்தூர் அரசு பேருந்தில் மாணவி ரஞ்சிதாவை வழியனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தை தெரிந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
- சிவாஜி