
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ளது நெடுங்குளம் கிராமம். இது முறையான போக்குவரத்து வசதி இல்லாத ஒரு குக்கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த அய்யாசாமி - பூங்காவனம் தம்பதியின் மகன் தமிழ்செல்வன். நீட் தேர்வு அறிமுகமான பிறகு பெற்றோர்கள் தங்களது சொத்துக்களை விற்று பல லட்சங்களை செலவு செய்து தங்களது பிள்ளைகள் நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்காக சென்னை, திருச்சி, கோவை, நாமக்கல், மதுரை போன்ற பெரு நகரங்களில் இதற்காகவே உருவாக்கப்பட்டு நடத்தப்பட்டு வரும் சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்த்து ஆண்டுக்கணக்கில் படித்து விட்டு நீட் தேர்வில் கலந்து கொள்கிறார்கள்.
அதுமட்டுமின்றி தமிழகத்தை கடந்து கேரளாவுக்கு சென்று கூட நீட் தேர்வுக்காக உருவாக்கப்பட்டுள்ள தனி பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து நீட் தேர்வில் சிலர் வெற்றி பெறுகிறார்கள். பலர் தோல்வி அடைகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில், ஏழை எளிய நடுத்தர குடும்பத்து பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும் விதத்தில் திட்டக்குடி சுற்று பகுதியில் உள்ள கிராம பள்ளி மாணவ மாணவிகளுக்காக திட்டக்குடியில் ஐயப்பன் டுடோரியல் சென்டர் வைத்து நடத்திவருகிறார் குமார் ஜி. இவரது சென்டரில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

இந்த பயிற்சி மையத்தில் சேர்ந்து தமிழ்செல்வன் நீட் தேர்வுக்காக படித்து வந்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதிய தமிழ்செல்வன், வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த சந்தோஷத்தை தனது பயிற்சி ஆசிரியர் குமார் ஜியை சந்தித்து அவரிடம் தெரிவித்து வாழ்த்து பெற்றார். அப்போது அங்கு படித்த முன்னாள் இன்னாள் மாணவர்கள் தமிழ்செல்வனுக்கு சால்வை அணிவித்தும் பரிசு வழங்கியும் தங்களது சந்தோஷத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
ஆசிரியர் குமார் ஜி மாணவனுக்கு ஸ்டெதஸ்கோப் பரிசளித்து பாராட்டினார். தமிழ்செல்வன் போன்று இங்கு பயிலும் மாணவ-மாணவிகள் ஒவ்வொருவரும் அவரவர் விரும்பும் படிப்புகளில் நன்கு படித்து தேர்ச்சி பெற வேண்டும் அதற்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறார் தமிழ்செல்வன் என்று பாராட்டி வாழ்த்தி பேசினார். ஒரு குக்கிராமத்தில் படித்து பெரிய பின்புலம் இல்லாமல் எளிய மாணவனான தமிழ்செல்வன் நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக படிப்பதற்கு இடம் கிடைத்துள்ளது திட்டக்குடி பகுதியில் உள்ள ஏழை எளிய மாணவ மாணவிகள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.