கொடநாடு கொலை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகியோரை விசாரிக்க கோரும் மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் நான்கு வாரக் காலத்திற்கு ஒத்தி வைத்துள்ளது. மேலும் தற்போது நடைபெற்று விசாரணைகள் குறித்த கோப்புகள் உதகை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அவர் தங்கி வந்த கொடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவங்களைத் தொடர்ந்து அச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் உயிரிழந்தது வழக்கில் திருப்பங்களை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சயான், வாலையர் மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்கக் கோரி குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் நான்கு வாரக் காலம் அவகாசம் கோரப்பட்ட நிலையில் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார். 34 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணை விவரங்கள், ஆதாரங்கள் சீல் வைக்கப்பட்ட கவரில் உதகை நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்கு விசாரணை வரும் 29 ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம்.