சென்னை ஆவடியில் ரயில் முன் விழுந்து பாலிடெக்னிக் மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை ஆவடி பகுதியில் உள்ள திருநின்றவூரைச் சேர்ந்த கோதண்டபாணி என்பவரின் மகன் மோனிஷ். 17 வயதான மோனிஷ் ஆவடியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
மோனிஷ் படித்து வந்த கல்லூரியில் கல்லூரி நிர்வாகம் மோனிஷின் செல்போனை பறிமுதல் செய்து வைத்திருந்தது. இந்நிலையில் மீண்டும் நிர்வாகத்திடம் தனது செல்போனை கேட்கச் சென்றுள்ளார் மோனிஷ். கல்லூரி நிர்வாகம் தர மறுத்ததால் வாக்குவாதம் எழுந்துள்ளது. கல்லூரி நிர்வாகம் உறுதியாய் கூற மன உளைச்சலிலிருந்த மோனிஷ் ஆவடி ரயில் நிலையம் வந்துள்ளார்.
ரயில் நிலையத்தில் திருப்பதியிலிருந்து சென்னை செல்லக்கூடிய ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். செல்போனை தராததால் ரயில் முன் விழுந்து தன் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவரின் செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவரின் உடலை மீட்ட காவல்துறையினர் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.