அதிமுக அரசின் கல்வி கொள்கையில் அலட்சியம் தான் காரணம் என தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம், பெருவளூர் கிராமத்தை சேர்ந்த பிரதீபா என்கிற மாணவி நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறமுடியவில்லை என்கிற மன அழுத்தத்தில் இன்னுயிரை மாய்த்து விட்டார் என்கிற செய்தியை கேட்டு மிகவும் மனவேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். பிரதீபா-வின் தந்தை சண்முகம், தாய் அமுதா கூலி தொழிலாளிகள், இவர்களுடைய மகள் பிரதீபா 10-ம் வகுப்பில் 490 மதிப்பெண், 12-ம் வகுப்பில் 1125 மதிப்பெண் பெற்று, நீட் தேர்வில் 155 மதிப்பெண் எடுத்துள்ளார். அதிமுக, திமுக அரசில் கல்வி வியாபாரம் ஆகிவிட்ட நிலையில், ஏழை மாணவியால் மருத்துவ கல்வியில் சேரமுடியவில்லை. இதேபோல் தான் அனிதா 12-ம் வகுப்பில் 1176 மதிப்பெண்கள் எடுத்து நீட்தேர்வினால் புறக்கணிக்கப்பட்டார். இன்று அதே நிலைமை பிரதீபா விற்கும் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு கல்வியை தரமானதாக மேலும் முன்னேற்றி, நீட்தேர்வில் அதிக மதிப்பெண் பெரும் அளவுக்கு மாணவர்களுக்கு பயிற்சியளிக்கவேண்டும்.
மேலும் தமிழகம் கல்வியில் இரண்டாம் இடத்தில் இருந்து, இன்றைக்கு கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டதற்கு அதிமுக அரசின் கல்வி கொள்கையில் அலட்சியம் தான் காரணம். இனிமேலாவது தமிழக அரசு மாணவ, மாணவிகளுக்கு நீட் தேர்வு எழுதும் வகையில் பயிற்சி பள்ளிகளை அதிகமாக கொண்டுவந்து மாணவர்களை நீட்தேர்வுக்கு தயார்படுத்தவேண்டும். மருத்துவம் படிக்க வேண்டும் என்று கனவில் இருக்கும் மாணவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றப்பாதைக்கு கொண்டுசென்று அவர்களுடைய வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் மாணவர்களும் எல்லாவற்றுக்கும் ஒரு மாற்றுவழி உள்ளது என்பதை சிந்தித்து ஒரு கதவு மூடினால், மறு கதவு திறக்கும் என்கிற பழமொழியை மனதில் உறுதியாக ஏற்றுக்கொண்டு, இதுபோன்ற கோழைத்தனமான முடிவுகளை எடுக்காமல், தைரியமாக எதிர்காலத்தை எதிர்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.