தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் இவருக்கு 16 வயதில் ஒரு மகள் இருக்கிறார். மாரியம்மாள் கூலி வேலை பார்த்து மாணவியைப் படிக்க வைத்து வருகிறார். இதனிடையே மாணவி, அந்தப் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாகப் புளியங்குடி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த மாணவியை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், ‘கடந்த 17 ஆம் தேதி அன்று மாணவி வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது இடைவேளை நேரத்தில் பள்ளி அலுவலக அறைக்கு மாணவி சென்று உதவித்தொகை தொடர்பான சான்றிதழ் வாங்கச் சென்றுள்ளார். இதனால் விலங்கியல் பாட வகுப்பில் பங்கேற்கத் தாமதமாகியுள்ளது. இதற்கிடையே மாணவியை வகுப்பறைக்கு உள்ளே விடாமல் வெளியே நிற்குமாறு பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியை கூறியுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்ற மாணவியிடம் பள்ளித் தலைமை ஆசிரியை, விலங்கியல் பாடப் பிரிவில் பங்கேற்கத் தாமதமானதைக் குறித்துக் கண்டித்துள்ளார். அது மட்டுமல்லாமல் மாணவிக்குப் பள்ளி மாற்றுச் சான்றிதழ் வழங்கிவிடுவதாக மிரட்டியுள்ளார். ஒரு வேளை பள்ளி மாற்றுச் சான்றிதழ் வழங்கினால் தனது தாய்க்கு அவமானம் ஆகிவிடும் என்று மாணவி கருதி, நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துள்ளார்” என்று தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மாணவியின் வீட்டைச் சோதனை செய்துள்ளனர். அதில், தற்கொலை செய்வதற்கு முன்பாக மாணவி தன் கைப்பட எழுதிய கடிதத்தைக் கைப்பற்றினார்கள். அந்தக் கடிதத்தில், ‘பள்ளியில் ஏற்பட்ட தாமதம் குறித்து உதவித் தலைமை ஆசிரியை, மாணவிகள் முன்னிலையில் என்னைத் திட்டினார். மேலும், பள்ளித் தலைமை ஆசிரியை வந்த பின்னர் எனக்கு டி.சி.(பள்ளி மாற்றுச் சான்றிதழ்) கொடுப்பதாகக் கூறினார். எனக்கு டி.சி கொடுத்தால் என் தாய்க்குத்தான் அவமானம் ஆகிவிடும். நான் மருத்துவ படிப்பு படிக்க விரும்பினேன். ஆனால், என்னால் படிக்க முடியவில்லை. உங்களை விட்டுப் பிரிகிறேன்” என எழுதியிருந்தார். இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட உதவித் தலைமை ஆசிரியை இந்த மாதத்துடன் ஓய்வு பெறும் நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.