Skip to main content

சாம்சங் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்!

Published on 15/10/2024 | Edited on 15/10/2024
The struggle of Samsung employees is called off

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 1500க்கும் மேற்பட்டோர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 8 மணிநேர வேலை, ஊதிய உயர்வு வழங்க வேண்டும், தொழிற்சங்கம் தொடங்க அனுமதிக்க வேண்டும், போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த மாதம் 9ஆம் தேதி (09.09.2024) முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியிருந்தனர். இருப்பினும் இந்த பேச்சுவார்த்தைகள் எதிலும் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிவடைந்தன.

இந்நிலையில் சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமுகமான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “சாம்சங் தொழிலாளர்கள் 09.09.2024 அன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தப் போராட்டத்தை விரைவில் பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்க்குமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். இதன்படி பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்,  சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர், தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆகியோரின் தலைமையில் பல்வேறு துறைகளின் அரசு அலுவலர்கள் இருதரப்பினரிடமும் பல்வேறு நிலைகளில் பேச்சு வார்த்தைகளை நடத்தினார்கள்.

The struggle of Samsung employees is called off

இப்பேச்சுவார்த்தையின் பயனாக சாம்சங் நிர்வாகம், தொழிலாளர்களின் நலனைக் கருதி பல்வேறு நலத்திட்டங்கள் அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக இன்று (15.10.2024) தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் முன்பு நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நிர்வாகத்தரப்பு மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்தப் பேச்சு வார்த்தையில், தொழில் அமைதி மற்றும் பொது அமைதி காக்கும் பொருட்டு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை உடனடியாக கைவிட்டு பணிக்குச் செல்ல வேண்டும். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், மீண்டும் பணிக்குத் திரும்பும்போது நிர்வாகம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக மட்டும் எவ்வித பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.

வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பும் தொழிலாளர்கள் நிர்வாகத்தினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் மேலும் நிர்வாகத்திற்கு எதிராக எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது. தொழிலாளர்கள் முன்வைத்த ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கையின்மீது நிர்வாகம் எழுத்துப்பூர்வமாகப் பதிலுரையைச் சமரச அலுவலர் முன்பு தாக்கல் செய்ய வேண்டும் என்ற முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும் இந்த அறிவுரைகளை இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டு, வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு, தொழிலாளர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்புவதாகத் தெரிவித்தனர். இதனால், சாம்சங் தொழிற்சாலையில் நடைபெற்று வந்த வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்ததது. தொழிலாளர்கள் அனைவரும் பணிக்குத் திரும்ப உள்ளார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்