தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் அருகில் உள்ள ஆயாள்பட்டிக் கிராமத்தின் முல்லைராஜ் (29) கடந்த 9 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். திருமணமாகாதவர். தற்போது காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தின் நவுகாம் என்ற பகுதியில் பணியிலிருக்கிறார். இந்நிலையில் திடீரென்று நேற்று முன்தினம் முல்லைராஜ் இறந்துவிட்டதாக ராணுவத்திலிருந்து ஒருவர் ஆயாள்பட்டியிலிருக்கும் அவரது தாயார் அழகம்மாளுக்கு போன் செய்திருக்கிறார்.
பதறிப்போனவர்கள், அந்த அலைபேசி எண்ணில் மீண்டும் தொடர்பு கொண்டதில் பதிலில்லை. சோகத்திலிருந்த ஊரார் தாய் அழகம்மாளுடன் திரண்டு வந்து சங்கரன்கோவிலில் குறைதீர் கூட்டத்திற்கு வந்த கலெக்டர் அருண்சுந்தர் தயாளனிடம் புகார் தெரிவித்தனர். அவரின் காலில் விழுந்து கதறினார் தாய் அழகம்மாள். கலெக்டரும் நடவடிக்கை மேற்கொள்வதாக ஆறுதல் படுத்தினார். இதனை ஏற்கனவே நக்கீரன் இணைய தளம் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான வைகோ, மத்திய ராணுவ அமைச்சரைத் தொடர்பு கொண்டு முல்லைராஜின் மரணம் குறித்து முறையான தகவல் தெரிவித்து அவரது இறப்பு உண்மையாக இருக்கும் பட்சத்தில் உடலைச் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அதன்பிறகே கடந்த 12ம் தேதியன்று முல்லைராஜ் இறந்ததாக உறுதி செய்யப்பட்டது. பின்னர் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு டெல்லியிலிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் ஆயாள்பட்டிச் சுற்றுப்பட்டுக் கிராம மக்கள் திரண்டு வந்து முல்லைராஜின் மரணத்திற்கான முறையான அறிக்கையின்றி உடலை வாங்கமாட்டோம் என்று ம.தி.மு.க.வின் மாவட்ட செயலாளர் ராஜேந்திரனின் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். ஸ்பாட்டுக்கு வந்த சங்கரன்கோவில் டி.எஸ்.பி., பாலசுந்தரம், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் மக்கள் தங்கள் கோரிக்கையில் உறுதியாயிருந்தனர். அதையடுத்து முல்லைராஜின் உடலுடன் வந்த ராணுவ அதிகாரிகளான என்.சி.சி. இளநிலை அதிகாரி ராஜீவ், முல்லைராஜ் உடன் பணியாற்றும் ராணுவ அதிகாரி சக்திவேல் உள்ளிட்டோர் அவர்களிடம் காஷ்மீர் மாநிலம் பாதுகாக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என்பதால் தகவல் தர தாமதமானது. அவரின் குடும்பத்தாருக்கு உரிய ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் வழங்கப்படும் என்று தெரிவித்ததையடுத்து உடலைப் பெற்றனர். மக்களின் அஞ்சலிக்குப் பின்பு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
திருமணமாகாத முல்லைராஜன் மனவருத்தத்திலிருந்ததாகவும் அதையடுத்தே திடீரென தன்னுடைய ஏ.கே.47 துப்பாக்கியால் முன்று முறை தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்களும் பரவுகின்றன.