சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை ஆக்கிரமித்து அப்பகுதி மீனவர்கள் மீன் கடைகளை அமைத்திருப்பதாகவும் இதனால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், லூப் சாலையில் மேற்கு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த வழக்கில் மீனவர்கள் தரப்பில் தங்களையும் மனுதாரர்களாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
லூப் சாலை என்பது பொது சாலை அல்ல. மீனவர்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட சாலை, சாந்தோம் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதால் தற்காலிகமாக லூப் சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி சார்பில் உறுதி அளிக்கப்பட்டிருப்பதாக மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. லூப் சாலையை விரிவாக்கம் செய்யக்கூடாது, நடைபாதைகள் அமைக்கக் கூடாது என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவை மீறி மாநகராட்சி சாலையை விரிவுபடுத்தி இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
மாநகராட்சி சார்பில் சம்பந்தப்பட்ட சாலையில் 25 மீன் கடைகள், 15 குடிசைகள், 21 பெட்டிக் கடைகள் அகற்றப்பட்டுள்ளதாக ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்திருந்தார். இந்த பணிகள் தினசரி அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சாலையில் ஆக்கிரமிப்பு இல்லை என்பதை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. கடைகள் அகற்றப்பட்டதற்கு மீனவர்கள் லூப் சாலையில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும், மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு சாலையின் மேற்கு பக்கத்தில் உள்ள சாலையோரத்தில் கடைகள் அமைத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என மீனவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை மனுவாகத் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டதன் அடிப்படையில், மாநகராட்சியின் சார்பில் மனுவானது தாக்கல் செய்யப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மீன் கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூன் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அத்துடன், யாருக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்த நீதிமன்றம் விரும்பவில்லை. பொது சாலை மாநகராட்சியின் சொத்து அல்ல மக்களின் சொத்து. சாலையை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது. இதனை அரசியலாக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், இன்று சட்டப் பேரவையில் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், ‘மீனவர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும்’ என்றார். மேலும் அரசின் தரப்பிலிருந்து போராட்டத்தைக் கைவிடுமாறு கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் வாங்குவதாக நொச்சிக்குப்பம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அரசின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை வாபஸ் வாங்குவதாகவும், கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் எனவும் மீனவ மக்கள் தெரிவித்துள்ளனர்.