திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு குருமன்ஸ் பழங்குடி மக்கள் சங்க தலைவர் சிவலிங்கம் தலைமையில் குருமன்ஸ் பழங்குடி இன மக்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சாதி பெயர்கள் பல்வேறு வகைகளில் அழைத்தாலும் இன பட்டியலில் உள்ள குருமன்ஸ் இன மக்களுக்கு பழங்குடி இனச் சான்றிதழ் வழங்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படியும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் சுற்றறிக்கையின் படியும் குருமன்ஸ் இன மக்களின் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு குருமன்ஸ் இன மக்களுக்கு பழங்குடியின சான்றிதழ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
குருமன்ஸ் பழங்குடியின கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தேங்காயை சாமி அருள் வந்தவர்களின் தலையில் உடைக்கும் குருமன்ஸ் இன மக்களுடைய பாரம்பரிய கலாச்சார நிகழ்ச்சியும் நடத்திக் காட்டி குருமன்ஸ் பழங்குடி இன சான்றிதழ் வழங்க கோரிக்கை வைத்தனர். சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த தர்ணா போராட்டத்தில் குருமன்ஸ் பழங்குடி இன மக்கள் சங்க பொதுச் செயலாளர் வீரபத்திரன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க தலைவர் டில்லி பாபு உள்ளிட்ட பெரும்பாலான நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.