ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதியில் 150 வீடுகள் கொண்ட மலைக் கிராமமாக கண்டப்பூர் உள்ளது. கடந்த வனப் பகுதியில் மத்தியில் முற்றிலும் போக்குவரத்து இல்லாத மலைக் கிராமமாக இருந்து வருகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி மக்கள் தங்களுக்கு சாலை வசதி வேண்டும் என அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கும், மக்கள் பிரதி நிதிகளுக்கும் மனு அளித்து வருகின்றனர். ஆனால் இதுவரை வனப்பகுதியில் மத்தியில் இருப்பதால் அவர்களுக்கு போதிய சாலை வசதியை ஏற்படுத்தித் தரவில்லை.
ஒரு வழி பாதையாகக் குண்டும், குழியுமான சாலையாக வனப்பகுதியின் நடுவே வனவிலங்குகள் நடமாட்டம் நிறைந்த பகுதியாக இருக்கின்றது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் 5 கிலோ மீட்டர் பயணம் செய்து பர்கூர் சாலைக்கு வருகின்றனர். இதனால் அங்கு இருக்கும் மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு போதிய கல்வி வசதி, மின் வசதி, ரேஷன் பொருள் வாங்க, மருத்துவ வசதி, அவசர தேவைகளுக்கான ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் கிடைப்பதில்லை. மேலும் உடல் நலம் பாதிக்கப்படுபவர்கள், கர்ப்பிணிப் பெண்களை தொட்டில் கட்டி பிரதான சாலை வரை தூக்கி வரும் நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் பர்கூர் மலைப்பகுதி தாமரைக்கரை பேருந்து நிறுத்தத்தில் கண்டப்பூர் மலைவாழ் மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் தங்களது குழந்தைகளுடன் தங்கள் ஊரின் சாலையை சீர் செய்து தார் சாலையாக மாற்றித் தரக் கோரி திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இனியும் தார் சாலை அமைக்க நடவடிக்கை அரசு எடுக்கவில்லை என்றால் வரும் நவம்பர் முதல் வாரத்தில் உண்ணாவிரதமும், இரண்டாவது வாரத்தில் வாக்காளர் அடையாள அட்டையை அரசிடம் ஒப்படைப்பது, மூன்றாவது வாரத்தில் ஆதார் அட்டையை அரசிடம் ஒப்படைப்பது, நான்காவது வாரத்தில் ரேஷன் அட்டையை அரசிடம் ஒப்படைப்பது, பின்பு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் இருக்குமாறு செய்து அமைதியான வழியில் அறப்போராட்டம் நடத்தப் போவதாகக் கூறியுள்ளனர்.