Skip to main content

ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழா; மாணவரின் ஆடைகளைக் கழற்றி சோதனை - போராட்டம்

Published on 26/04/2023 | Edited on 26/04/2023

 

தஞ்சையில் பட்டம் பெற வந்த மாணவரை பட்டமளிப்பு விழாவிலிருந்து வெளியேற்றி ஆடைகளைக் கழற்றி சோதனை செய்த போலீசாரை கண்டித்து முற்றுகை.

 

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 24 ஆம் தேதி ஆளுநர் ரவி கலந்து கொண்ட பட்டமளிப்பு விழா நடந்தபோது, ஆளுநருக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டம் செய்தனர். இந்த நிலையில் எம்ஃபில் பட்டம் பெற வந்திருந்த இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் ஜி.அரவிந்தசாமி என்ற மாணவரை போலீசார் அங்கிருந்து அழைத்துச் சென்று தனி அறையில் வைத்து கருப்புக் கொடி வைத்துள்ளாரா என சோதனை செய்துள்ளனர். இதனால் அப்போது பரபரப்பு ஏற்பட்டது. ஆளுநர் விழா முடிந்து செல்லும் வரை பாதுகாப்பாக வைத்திருந்த போலீசார், அவர் சென்ற பிறகு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு பல்கலைக்கழக துணை வேந்தர் திருவள்ளுவன், மாணவர் அரவிந்தசாமிக்கு பட்டம் வழங்கினார்.

 

இந்த தகவல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு தெரிவிக்கப்பட நிலையில் அரவிந்தசாமியின் ஆடையைக் கழற்றி சோதனை செய்த போலீசாரை கண்டித்து  26 ஆம் தேதி தஞ்சை டிஐஜி அலுவலகம் முற்றுகைப் போராட்டம் என அறிவித்தனர். இந்த அறிவிப்பையடுத்து டிஐஜி அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. அறிவித்தபடியே அங்கு வந்த எஸ்.எஃப்.ஐ, டைஃபி இளைஞர்கள் போலீசாரின் தடுப்புகளை மீறி முன்னால் செல்ல முயன்றபோது போலீசார் அரண் அமைத்தனர். அரணை தள்ளிவிட்டு தடுப்பு கம்பிகளை தள்ளிக்கொண்டு முன்னேறியதால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியதால் அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்