ஈரோடு அருகே திமுகவை சேர்ந்த ஒன்றியக் குழு துணைத் தலைவரைக் கண்டித்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியக் குழு துணைத் தலைவராக திமுகவை சேர்ந்த தீத்தி பழனிச்சாமி கடந்த ஒரு மாதமாக இருந்து வருகிறார். கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்தில் 10 ஊராட்சிகள் உள்ளன. இந்த 10 ஊராட்சிகளில் அதிமுக, திமுக, உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக திமுகவை சேர்ந்த ஒன்றியக் குழு தலைவர் தீத்தி பழனிச்சாமி ஒவ்வொரு ஊராட்சிகளில் தனது பணி வரம்பை மீறி ஊராட்சி மன்றத் தலைவர்களுக்குத் தெரியாமல் ஆய்வு மேற்கொள்வது மட்டுமல்லாமல் பொதுமக்களிடம் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பற்றி தவறான கருத்துக்களைத் தெரிவித்தும் வந்துள்ளார். மேலும் ஒவ்வொரு ஊராட்சிகளில் நிர்வாக ரீதியாகவும் இடையூறுகளையும் ஏற்படுத்தி வந்துள்ளார். ஒன்றியக் குழு துணைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 9 ஊராட்சி மன்றத் தலைவர்கள் கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து காலவரையற்ற உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு பிரச்சனைகளைக் களையவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.