தமிழகத்தில் கோடை காலம் காரணமாக பரவலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை பொழிந்து வருகிறது. அந்த வகையில் 19 ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் இராமநாதபுரம் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் விரிவாக்கம் மற்றும் பயிற்சித்துறையின் உதவி இயக்குநர் நேற்று (16.05.2024) வெளியிட்ட அறிவிப்பில், “இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை செய்தியின்படி மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் காற்றானது மணிக்கு 40 முதல் 45 கி.மீ வரை அதிகபட்சமாக 55 கி.மீ வரை வீசக்கூடும். மற்றும் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
எனவே, திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. மீனவர்களுக்கு இந்த வானிலை எச்சரிக்கையினை மீனவ கிராம ஆலயங்கள் வாயிலாக அறிவிப்பு செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து 10 கடலோர மீனவ கிராமத்தைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரம் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் சுமார் 1200 நாட்டுப் படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் தேனி 5 ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று (17.05.2024) கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே போன்று விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் ஈரோடு ஆகிய 14 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.