Skip to main content

‘புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ -  போலீஸ் கமிஷனர்

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
Strict action will be taken against those selling products Police Commissioner

சென்னை மாநகரில் கடந்த 7 நாள்களில் நடைபெற்ற சிறப்பு சோதனையில் 160 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னைப் பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் மூலம் ‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை’ (DABToP - Drive Against Banned Tobacco Products) என்ற சிறப்பு சோதனை மேற்கொண்டு புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 29.01.2024 முதல் 04.02.2024 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 36 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 160 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், 24 கிலோ மாவா, ரொக்கம் 22ஆயிரத்து 180 ரூபாய், 4 செல்போன்கள், 2 இருசக்கர வாகனங்கள், 1 ஆட்டோ மற்றும் 1 இலகு ரக சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் உட்பட சட்டவிரோத பொருட்களை கடத்திவருபவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்