மயிலாடுதுறையில் தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக் கல்லூரி அமைந்துள்ளது. இங்கே 3000 மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரிக்குச் செல்லும் சாலை மற்றும் கல்லூரி வளாகத்தில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றி வருகின்றன. நேற்று வழக்கம்போல கல்லூரிக்குச் சென்ற மாணவிகளை கல்லூரி நுழைவு வாயில் அருகே சுற்றித்திரிந்த நாய் துரத்தி துரத்தி கடித்தது. இதில் மாணவிகள் அலறி அடித்து நாலாபுறமும் ஓடினர். நான்கு மாணவிகளை நாய் கடித்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. நாய் கடியால் பாதிக்கப்பட்ட சுபானா மற்றும் ஜெயந்தி ஆகிய இரண்டு மாணவிகள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு மாணவிகள் சிகிச்சை பெற்று கல்லூரிக்குச் சென்றனர்.
மயிலாடுதுறை நகரில் தெரு நாய்கள் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடித்த நாய் ரேபிஸ் நோய் தாக்கிய வெறிநாயா? என்பது பற்றி விசாரணை செய்து உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
"மயிலாடுதுறை நகராட்சியின் சாலைகள் சமீபகாலமாக கழிவுநீரின் வாய்க் கால்களாகவும், சாலையோரங்களும் பேருந்து நிலையங்களும் குப்பை தொட்டிகளின் கூடாரமாகவும் மாறியிருக்கிறது. பாதாளச்சாக்கடை எந்த நேரத்தில் எங்கு உள்வாங்கும் யாரை பலிவாங்கும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மனபீதியோடு சாலைகளை கடக்கின்றனர். சமீபத்தில் நகரத்தின் மிகமுக்கியமான இடமாகவும், நெரிசல் மிக்க பகுதியாகவும் இருந்துவரும் கிட்டப்பா அங்காடி அருகே பாதாளச்சாக்கடை உள்வாங்கி பெரிய நெரிசலை உண்டாக்கியது, அதனை அவசரகதியில் தீபாவளிக்காக தற்காலிக தீர்வு கண்டுள்ளனர். இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும். உயிர் பலியாகவிடாமல் தடுக்க வேண்டும் என பலமுறை புகார், போராட்டம் நடத்தியும் பாதாளச்சாக்கடை விவகாரத்தில் நகராட்சி தலைவர்களும், அதிகாரிகளும் கவன குறைவாகவே இருந்து வருகின்றனர்.
அதேபோல வீதிகள், முக்கிய சாலைகள் தோறும் இரவு, பகல் பாராமல் கால்நடைகள் சுற்றி திரிகின்றன. இரவு நேரங்களில் கால்நடைகள் முழுமையாக முக்கிய சாலைகளை ஆக்கிரமித்து படுத்து விடுகின்றன. இதனை கவனத்தில் கொள்ளமுடியாமல் பல விபத்துக்கள் தினசரி நடக்கின்றன. இதுகுறித்து பலமுறை நகராட்சியில் புகார் அளித்தும் பயனில்லை. அதேபோலத்தான் தெரு நாய்களின் தொல்லையும், ஞானாம்பிகை கல்லூரி அருகே காய்கறி சந்தை, உள்ளிட்ட பெரு வர்த்தகம் நடக்கிறது. அங்கு நாய்களின் ஆக்கிரமிப்பும் அதிகமாகவே இருக்கிறது. இரண்டு கல்லூரி, ஓரிரு பள்ளிக் கூடத்திற்கு சென்று வர அந்த சாலை பிரதான சாலையாக இருந்துவருகிறது. இதனை கருத்தில் கொண்டு நகராட்சி செயல்படாமல் இருந்ததன் விளைவு இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது" என்கிறார்கள் பொதுமக்களும், பேராசிரியர்களும்.