Skip to main content

"விளைநிலங்களை அழித்துத் தொழிற்சாலை அமைக்கப்படுவதை எதிர்த்து வீதியில்...."- சீமான் அறிக்கை!

Published on 25/02/2022 | Edited on 25/02/2022

 

"On the street against the destruction of farmland and the establishment of the factory ...." - Seaman report!

 

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (25/02/2022) வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதிக்குட்பட்ட பாலியப்பட்டு கிராமத்தில் வேளாண் நிலங்களையும், மக்களின் குடியிருப்புகளையும் அழித்து, அரசு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் (சிப்காட்) சார்பில் புதிதாகத் தொழிற்சாலை வளாகம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. 

 

விளைநிலங்களை அழித்துத் தொழிற்சாலை அமைக்கப்படுவதை எதிர்த்து வீதியில் இறங்கிப் போராடிவரும் கிராம மக்களின் உரிமைக் குரலுக்குச் சிறிதும் மதிப்பளிக்காது, அவர்களை மிரட்டி நிலங்களைப் பறிக்க நினைக்கும் அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

 

பாலியப்பட்டு கிராமத்தினை மையமாகக் கொண்டு தொழிற்சாலைகள் அமைப்பதற்காக ஏறத்தாழ 1000 ஏக்கர் விளைநிலங்களையும், 500 வீடுகளைக் கொண்ட குடியிருப்புப் பகுதிகளையும் வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்தப்பட முயலும், தமிழ்நாடு அரசின் எதேச்சதிகாரப் போக்கினை எதிர்த்து, அப்பகுதி மக்கள் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகத் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அருகிலுள்ள இரும்பு தாதுவளம் கொண்ட கவுத்தி மலையை முழுவதுமாக அழித்து, கனிமவள வேட்டையாடும் நோக்கத்துடனேயே இத்தொழிற்சாலை வளாகம் அமைக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கும் அச்சம் மிகமிக நியாயமானது.

 

பாலியப்பட்டு மக்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டத்தில், கடந்த மாதம் நாம் தமிழர் கட்சி பங்கேற்று அவர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகள் வெல்லத் தனது முழு ஆதரவினையும் தெரிவித்தது. ஆனால் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது வேளாண் நிலங்கள் மீது எட்டுவழிச்சாலை அமைப்பதை எதிர்த்து மக்கள் போராடியபோது, மக்களுக்கு ஆதரவாக நிற்பதாக நாடகமாடிய தி.மு.க., தற்போது ஆட்சி, அதிகாரத்திற்கு வந்தவுடன் எட்டு வழிச்சாலை திட்டத்தை மீண்டும் நிறைவேற்ற முயல்வதும், கோவை, அன்னூர், திருவண்ணாமலை, பாலியப்பட்டு உள்ளிட்ட இடங்களில் மக்கள் எதிர்ப்பையும் மீறி வேளாண் நிலங்களை அபகரித்துத் தொழிற்பூங்கா அமைக்க முயல்வதும் தி.மு.க. அரசின் பச்சை துரோகத்தையே வெளிக்காட்டுகிறது.

 

தொழிற்சாலை அமைப்பதற்கு எதிராக கடந்த 65 நாட்களுக்கும் மேலாக, கிராம மக்கள் போராடி வரும் நிலையில், இதுவரை அவர்களின் கோரிக்கை குறித்து எவ்வித பேச்சுவார்த்தை நடத்தவும் முன்வராத தமிழ்நாடு அரசு, மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள், மற்றும் காவல் துறையினரைக் கொண்டு உழைக்கும் மக்களை மிரட்டுவது சிறிதும் மனச்சான்றற்ற அரச வன்முறையாகும். வளர்ச்சி என்ற பெயரில் உயிர்வாழ உணவளிக்கும் வேளாண்மையை அழித்து, அதன்மீது நாசகர தொழிற்சாலைகளை அமைக்க முயலும் தமிழ்நாடு அரசின் முடிவு கொடுங்கோன்மையின் உச்சமாகும்.

 

ஆகவே, மக்களின் விருப்பத்திற்கு மாறாக விளைநிலங்களையும், வாழ்விடங்களையும், அபகரிக்கும் கொடுஞ்செயலை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும், வேளாண் நிலங்கள் மீது தொழிற்சாலைகளை அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

 

தங்களின் நில உரிமைக்காகத் தொடர்ந்து போராடி வரும் பாலியப்பட்டு மக்கள் முன்னெடுக்கும் மனிதச் சங்கிலி போராட்டம் வெற்றிபெறவும், அவர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகள் நிறைவேறவும் நாம் தமிழர் கட்சி தோள்கொடுத்துத் துணைநிற்கும் என்றும் உறுதியளிக்கிறேன்." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்