ஓகி புயலின் பொழுது திசைமாறி காயங்களுடன் கன்னியாகுமரி வந்த சினேரியஸ் வகை கழுகு வானில் சுதந்திரமாக பறக்கவிடப்பட இருக்கிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஓகி புயலின் போது கன்னியாகுமரியின் சின்னமுட்டம் பகுதியில் திசைமாறி படுகாயங்களுடன் அரிய வகையான சினேரியஸ் கழுகு கைப்பற்றப்பட்டது. இக்கழுகு உதயகிரி கோட்டையில் உள்ள பல்லுயிர் என காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்தது. ஓகி புயலில் திசைமாறி வந்த கழுகு என்பதால் இதற்கு ஓகி என்றே பெயரிடப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது இக்கழுகு முழுமையாக குணமடைந்து விட்டது.
இந்நிலையில் சுதந்திரமாக வானில் பறக்க தயாராகி வருகிறது ஓகி. சினேரியஸ் கழுகை சுதந்திரமாக பறக்கவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள், உயிரியல் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தல்களை கொடுத்து வந்த நிலையில், அதனை சினேரியஸ் கழுகுகள் அதிகம் வாழும் ராஜஸ்தானிற்கு கொண்டு சென்று வானில் பறக்கவிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி வானில் பறந்து சுதந்திர காற்றை அனுபவிக்க இருக்கிறது ஓகி. இந்த செய்தி உயிரியல் ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.