Skip to main content

புயலுக்கு தெரியுமா சாதீ…?

Published on 24/11/2018 | Edited on 24/11/2018

டெல்டா மாவட்டங்களையும், அதன் அருகே இருக்கும் சில மாவட்டங்களிலும் கோர தாண்டவம் ஆடிச் சென்றிருக்கிறது கஜா புயல். உயிர்சேதம், பொருட்சேதம் என பல துயரங்களை சந்தித்துள்ள அந்த மக்களுக்கு, மனிதாபிமான அடிப்படையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தன்னார்வலர்கள் உதவி வருகின்றனர்.

 

kaja

    
சோறு போட்ட விவசாயி இன்று பட்டினியாய் கிடப்பதை பார்க்க சகிக்காத பலர், பிஸ்கட், ரொட்டி, துணிமணி, நாப்கின் என தம்மால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். வெளியூர்களில் இருந்து நிவாரண பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை, கிராமத்தினர் சில இடங்களில் மறித்து அவர்களுக்கு தேவையான பொருட்களை பெற்றுச் செல்கின்றனர். சில இடங்களில் தங்களுக்கு தேவை போக, மற்ற ஊர்களுக்கு திருப்பிவிடுகின்றனர்., அந்த ஊருக்கு எப்படி செல்ல வேண்டும் என வழியும் சொல்லிவிடுகின்றனர்.

  

kaja

 

ஆனால், ஒரு சில இடங்களில் நிவாரண பொருட்களை பங்கிட்டுக்கொள்வதில் சாதி பார்க்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. கிராமங்களில் பெரும்பான்மை சமூகத்தினர் வசிக்கும் தெருக்கள் முதலிலும், காலனி தெரு (தலித் மக்கள் வசிப்பிடம்) அதை தாண்டியும் இருக்கும். நிவாரண வண்டிகள் ஊரை நோக்கி வரும்போது பெரும்பான்மை மக்களின் வீடுகள் முதலில் இருப்பதால், அவர்கள் அதை முதலில் பெற்றுக் கொள்கிறார்கள். காலனி மற்றும் சேரிப்பகுதிக்கு இந்த பொருட்கள் கிடைப்பதில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு ஆதாரமாக சேரி மக்கள் வசிக்கும் பகுதி, விளம்பர தட்டிகளும் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், நூற்றுக்கணக்கான மக்கள் தங்கியுள்ள நிவாரண முகாம்களிலும், சாதி பாகுபாடு பார்க்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

 

    
இருந்ததை எல்லாம் இழந்துவிட்டு, அடுத்த வேளை உணவுக்கு கையேந்தி நிற்கும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டது கஜா புயல். அந்த புயலுக்கு தெரியுமா? இவர்கள் இன்ன சாதி என்று. புயலை பொறுத்தவரை எல்லோரும் ஒன்று தான். அதுபோல் எல்லோரும் ஓரினம் என்ற எண்ணம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வருவது எப்போது.?

 

 

சார்ந்த செய்திகள்