திருவண்ணாமலை மாவட்டத்தில் வியாபார நிறுவனங்கள் தனிமனித இடைவெளிகளைக் கடைப்பிடிக்காததால் கரோனா பரவல் அதிகரித்தது. சாயர் மோட்டார் குரூப், சுமங்கலி நகைக்கடை, இரண்டு சூப்பர் மார்க்கெட்களில் பணியாற்றியவர்கள் மற்றும் அதன் உரிமையாளர் மற்றும் ஒரு கட்டடப் பொறியாளர் எனப் பலருக்கும் கரோனா வந்துள்ளது.
திருவண்ணாமலை நகரில் உள்ள 39 வார்டுகளில் சுமார் 60 கரோனா நோயாளிகள் உள்ளனர். இதுவரை திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவால் 5 பேர் பலியாகியுள்ளனர். இதனால் வியாபாரிகள் அதிர்ச்சியாகியுள்ளனர். இதனால் திருவண்ணாமலை தாலுக்கா வியாபாரிகள் சங்கம், தனது பொதுக்குழுவைக் கூட்டி வரும் ஜீன் 20ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தன்னிச்சையாகக் கடைகளை மூடுவது என அறிவித்துள்ளனர். இதற்காக அறிவிப்பை தாலுக்கா வர்த்தகர்கள் சங்க தலைவர் தனகோட்டி என்பவர் செய்தியாளர்களை ஜீன் 17ஆம் தேதி சந்தித்து அறிவித்தார்.
இதேபோல் செய்யார், வந்தவாசி, சேத்பட் தாலுக்கா வியாபாரிகள் சங்கமும் அறிவித்துள்ளது. இந்தக் கடைகள் மூடல் என்பது ஜீன் 16ஆம் தேதி முதல் என முன்பு அறிவித்தனர், பின்பு தேதி மாற்றி 17 என்றனர், பின்னர் 19 என்றனர், தற்போது 20ஆம் தேதியில் இருந்து என அறிவித்துள்ளனர்.
இப்படி தேதி மாறி மாறி அறிவித்தது குறித்து விசாரித்தபோது, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வியாபார சங்க நிர்வாகிகளை மிரட்டினர். நீங்கள் கடையடைப்பு செய்வதை அரசாங்கம் விரும்பவில்லை, கடையை அடைக்ககூடாது என மிரட்டினர். அந்த மிரட்டலால் கடைகளை அடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. கடைகளை அடைத்தால் கரோனா பரவுகிறது என்கிற எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டு உண்மையாகிவிடும். அதனால் கடைகளை அடைக்க அனுமதிக்காதீர்கள் என அரசு உத்தரவிட்டதால், மாவட்ட நிர்வாகம் அதனை வியாபார சங்கத்தை எச்சரித்தது.
அந்த எச்சரிக்கையை ஏற்பதா, வேண்டாமா என்கிற சர்ச்சை எழுந்தது. அரசை விட உயிர்தான் முக்கியமென வியாபாரிகள் முடிவெடுத்தே கடையடைப்புக்கு அறிவிப்பு செய்தனர் என்கின்றனர் வியாபாரிகள் தரப்பிலேயே.