சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞரிடம் லிப்ட் கேட்பதாக ஏமாற்றி காதல் ஜோடி பண பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வந்த நிலையில் காதல் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் கணேஷ்குமார் (42) மெக்கானிக்காக பணியாற்றி வரும் கணேஷ் குமார் கடந்த மாதம் 24 ஆம் தேதி செங்குன்றத்தில் இருந்து தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் புழல் அருகே சென்று கொண்டிருந்தபோது ஆள் நடமாட்டம் இல்லாத சாலை பகுதியில் இளம்பெண் ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார். அப்பொழுது இரு சக்கர வாகனத்தை கணேஷ்குமார் நிறுத்தியுள்ளார். அந்த நேரத்தில் அங்கு மறைந்திருந்த இளைஞர் ஒருவர் ஓடி வந்து கணேஷ் குமார் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி செல்போனை பறித்துக் கொண்டு இளம்பெண்ணுடன் தப்பித்துச் சென்றுள்ளார்.
இது தொடர்பாக உடனடியாக கணேஷ்குமார் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் புழல் பாலம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த ஜோடி போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றது. அவர்கள் இருவரையும் துரத்தி பிடித்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் புழல் பகுதியைச் சேர்ந்த அபினேஷ் (22), கண்ணகி நகரை சேர்ந்த வாணி (19) என்பது தெரிய வந்தது. காதல் ஜோடியான இவர்கள் பொங்கல் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பணம் தேவைப்பட்டதால் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இருசக்கர வாகனங்களில் வருபவர்களிடம் வாணி லிப்ட் கேட்க நிறுத்துவதும் மறைந்திருக்கும் அபினேஷ் வழிப்பறியில் ஈடுபடுவதும் வாடிக்கையாக கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்பொழுது நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.