Skip to main content

காட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கல் மரம்-அதே இடத்தில் புவியியல் காட்சியிடமாக அமைக்க கோரிக்கை

Published on 30/10/2024 | Edited on 30/10/2024
A stone tree found in the forest! A request to set up a geographical exhibition at the same place


புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் மிரட்டுநிலை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரின் வழிகாட்டுதலின்படி அறிவியல் ஆசிரியர் மா.ஜீவிதா மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள்  பள்ளியின் அருகில் உள்ள பொன்னாம்பட்டி கிராமத்தில் காட்டுப் பகுதியில் கல்மரம் வெளிப்பட்டிருப்பதை கண்டறிந்துள்ளனர். ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறிய சில கல்மரங்களை கண்டுபிடித்துள்ள புதுகை  தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு நடுவம் தலைவர் ச.பாண்டியன்  ஆய்வு செய்து இது கல் மரம் தான் என்பது உறுதிப்படுத்தினார்.

மேலும் அவர் கூறும்போது, புதுக்கோட்டை நிலவியல் அமைப்பு மாறுபாடுடைய நில அமைப்பாக உள்ளது. இங்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் காலநிலை மாற்றத்தால் எரிமலைக் குழம்பு வெளிவந்தும், விண்கற்கள் வெடித்துச் சிதறி பூமியில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருந்த டைனோசர், தாவரங்கள், கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் பலவகை உயிரினங்கள் இயற்கையாகவே அழிவுக்குள்ளாகியது. இதனால் பூமியின் பெரும் பகுதியில் எண்ணற்ற உயிரினங்களும் தாவரங்களும் புதையுண்டு பலகோடி ஆண்டுகளாக பூமிக்கடியில் சிக்கியுள்ளது.

சுண்ணாம்புப் பாறைகளின் இடையில் சிக்கியதன் காரணமாகவும், காரத்தன்மையின் காரணமாக மக்காமல் அதே நிலையில் இருந்துள்ளது. இதன் காரணமாக, கரிமப் பொருளாக மட்கும் நிலையில் உள்ள மரம் கடல்வாழ் உயிரிகள், கனிமப் பொருளால் ஆன படிமங்களாக மாறிவிட்டன.இந்த நிகழ்வு ஏற்பட நீண்ட நெடிய காலங்களை எடுத்துக் கொள்கிறது. கல் மரம் என்பது தொல்லுயிர் எச்சம் என்றும், உயிருடன் மண்ணுக்குள் புதையுண்ட உயிரினங்கள் மட்டுமே தொல்லுயிர் எச்சங்களாக மாற்றம் அடைகின்றன என்று அறிவியல் ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகிறது.

A stone tree found in the forest! A request to set up a geographical exhibition at the same place

தமிழகத்தில் அரியலூர்,  கடலூர் மாவட்டம் திருவக்கரை, பெரம்பலூர் போன்ற இடங்களில் கல் மரப் படிவங்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் நரிமேடு பகுதியில் ஏற்கனவே இரண்டு  கல்மர துண்டுகள் கிடைத்துள்ளது. இதில் ஒன்று 2016 ஆம் ஆண்டு தமிழ் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இது 28 செ.மீ. நீளமும், 19 செ.மீ. அகலமும் கொண்டதாகவும், மற்றொன்று 2021 ஆம் ஆண்டு ஒரு கல் மரத்தை  கண்டறிந்தேன். இதன் அளவு 10 செ.மீ உயரமும் 10.5 செ.மீ அகலமும் கொண்டதாக இருந்தது. இந்தக் கல் படிமம், புதுக்கோட்டை மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது, கிடைத்துள்ள கல் மரம் காட்டுப் பகுதியில் மண்ணில் புதைந்த நிலையில் காணப்படுகிறது. இவை மிக நீண்டதாக இருந்து, தற்போது உடைந்து பல பாகங்களாக காணப்படுகிறது. இந்த இடத்தினை இந்திய புவியியல் ஆய்வுத் துறை ஆய்வு செய்து இதன் தொடர்ச்சி மற்றும் இதன் வகையினை கண்டறியவும் மேலும் இதனை வேறொரு இடத்தில் மாற்றி காட்சிப்படுத்தாமல் அதே இடத்தில் அருங்காட்சியகமாக அல்லது புவியியல் பார்வையிடமாக அறிவித்து சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் வகையில் தேவையான ஏற்பாடு செய்யவும் புதுகை தொல்லியல் மற்றும் வரலாற்று நடுவம், அரசு உயர்நிலைப்பள்ளி மிரட்டு நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர், அறிவியல் ஆசிரியர் ம. ஜீவிதா மாணவர்   ஆகியோர்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

சார்ந்த செய்திகள்