கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை கேரளாவில் மீட்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்தில் இரவில் பெற்றோர்களுடன் நடைமேடையில் உறங்கிக் கொண்டிருந்த நான்கு மாத குழந்தையை பெண் ஒருவர் தூக்கிச் செல்லும் வீடியோ காட்சி ஒன்று வெளியானது. முத்துராஜா-ஜோதிகா என்ற தம்பதியின் குழந்தை கடந்த 23ஆம் தேதி காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
பின்னர் போலீசார் பேருந்து நிலையத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது பெண் ஒருவர் குழந்தையை தூக்கிச் சென்றது தெரியவந்தது. மேலும் அந்த பெண் கோட்டார் ரயில் நிலையத்திலிருந்து கேரளா சென்றது தெரிய வந்தது. குழந்தை திருடிய அந்த பெண்ணை பிடிப்பதற்காக தமிழக போலீஸ் தரப்பில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. தேடப்பட்ட பெண் கேரளா சென்றது தெரிய வந்ததால் கேரள காவல்துறையின் உதவியை தமிழக போலீசார் நாடினர்.
தொடர்ந்து கேரளாவில் ஒரு ரயில் நிலையத்தில் ஒரு தம்பதி குழந்தையுடன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது. நாராயணன்-சாந்தி என்ற அந்த தம்பதியை கைது செய்து கன்னியாகுமரிக்கு அழைத்து வந்த போலீசார் விசாரணை நடத்தி அந்த குழந்தையை உரிய தாயிடம் ஒப்படைத்தனர்.
குழந்தையை வைத்து பிச்சை எடுக்கும் நோக்கில் அந்த பெண் குழந்தையை கடத்தியதாக இந்த சம்பவத்தில் விசாரணை அதிகாரியாக செயல்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் தெரிவித்துள்ளார்.