Skip to main content

சார்பதிவாளர் அலுவலகத்தில் திருடப்பட்ட பிறப்பு இறப்பு பதிவேடு! 

Published on 25/03/2022 | Edited on 25/03/2022

 

Stolen Birth Death Record in Office!

 

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் சால்டுரோட்டை சேர்ந்தவர் கண்ணபிரான். இவரது மகன் பாலு(42). இவர், மரக்காணத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணி செய்து வருகிறார். இவரது நண்பர் ஐயனார்(39) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஹமீது(45) ஆகியோர் மரக்காணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கும் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்களுக்கும் இடையில் இடைத்தரகர்களாக இருந்து கமிஷன் பெற்றுக்கொண்டு அதில் ஒரு பகுதியை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களுக்கு கொடுத்து சான்றிதழ்கள் பெற்றுத் தரும் வேலையை செய்து வந்துள்ளனர்.


இவர்கள் சான்றிதழ் வழங்குவதற்கு பொதுமக்களிடம் அதிகளவு பணத்தை பெற்றுக்கொண்டு ஒரு கட்டத்திற்குப் பிறகு இவர்களே போலியாக சான்றிதழ்கள் தயாரித்து வழங்கி வந்துள்ளனர். அதேபோல் அதிகாரிகளின் கையெழுத்து அரசு முத்திரை ஆகியவற்றையும் போலியாக பயன்படுத்தியதாக தெரியவருகின்றது. இதுகுறித்த மரக்காணம் போலீசாருக்கு ரகசிய தகவலாக கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் மரக்காணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் வேலை செய்து வந்த பாலுவை தனியாக அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.


அப்போது அவர் ஐயனார் மற்றும் ஹமீது ஆகியோருடன் சேர்ந்து போலியாக அரசு முத்திரை, பத்திரம், இவற்றைப் பயன்படுத்தி போலியாக சான்றிதழ்கள் தயாரித்து பொதுமக்களிடம் கொடுத்து பணம் வாங்கியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து பாலு, ஐயனார் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஹமீதுவை போலீசார் தேடி வருகின்றனர். 

 

மேலும் விசாரணையில், போலி ஆவணம் தயாரிப்பதற்காக மரக்காணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து பிறப்பு, இறப்பு பதிவேடுகளை திருடிவந்து, அதில் இருந்த பெயர்களை மனுச் செய்தவர்களுக்கு போலியாக சான்றிதழ் தயாரித்து கொடுத்ததும் தெரியவந்தது. தற்போது திருடப்பட்ட அந்த பதிவேடுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சான்றிதழ்களை போலியாக தயாரித்து அதிக பணத்திற்கு கொடுத்து வந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் வேறு என்ன விதமான மோசடிகளை செய்துள்ளார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்