வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த சின்னதாமல் செருவு பஞ்சாயத்திற்கு உட்பட்ட பக்காலபள்ளி கிராமத்தில் 2020ம் ஆண்டு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்க நில எடுப்பு செய்தனர். அந்த இடத்தில் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி, அங்கன்வாடி, நீர்த்தேக்க தொட்டி போன்றவை அரசு சார்பில் கட்டப்பட்டது.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் பக்காலபள்ளி பகுதியில் உள்ள 93 நபர்களுக்கு வீட்டுமனைக்கு நில அளவீடு செய்து இடங்கள் ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அந்த 93 நபர்களுக்கு பட்டா வழங்கவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக பக்காலபள்ளி, சின்னதாமல் செருவு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் அனைத்து அதிகாரிகளும் வந்து பார்வையிட்டு தான் செல்கின்றனர். ஆனால் தற்போது வரை 93 நபர்களுக்கு பட்டா வழங்கவில்லை என்று கிராம மக்கள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.
மூன்று ஆண்டுகளாகப் பொதுமக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் பட்டா வழங்காமல் இருக்கும் வருவாய்த்துறை அதிகாரிகளைக் கண்டித்து எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். இதுபற்றி தேர்தல் புறக்கணிப்பு துண்டுப் பிரசுரங்கள் கிராமங்களில் ஒட்டப்பட்டு மக்களுக்கும் தரப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.