ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரத்தில் சுற்றுச்சூழல் விதிகள் எதுவும் மீறப்படவில்லை எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என முடிவு செய்து கடந்த மே22 ஆம் தேதி தூத்துக்குடியை சுற்றியுள்ள கிராம மக்கள் சுமார் 50 ஆயிரம் பேர் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை முற்றுகையிட அமைதியாக பேரணியாக சென்றனர். அப்போது, தடையை மீறி பேரணி சென்றதாக பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய தடியடி, துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட முடிவெடுத்து அதற்கான அரசாணையை கடந்த மே மாதம் 28 - ஆம் தேதி வெளியிட்டது. இந்நிலையில் தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் சுற்றுச்சூழல் விதிகள் எதுவும் மீறப்படவில்லை எனவும் வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட பிறப்பித்த அரசாணையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட நிபந்தனைகளை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிறைவேறாத காரணத்தால் ஆலையை நிரந்தரமாக மூட முடிவெடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.