மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கோரிய வழக்கில் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த வருடம் மே மாதம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகி ஆலையானது மூடப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசின் உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் பசுமை தீர்ப்பாயம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றை நாடிய நிலையில் மீண்டும் உயர்நீதிமன்றத்தை நாடும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் புதியதாக தொடங்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் தூத்துக்குடி சிப்காட்டில் இருக்கக்கூடிய 60 ஆலைகளில் ஸ்டெர்லைட் ஆலைதான் நச்சுவாயுக்களை வெளியிடும் ஆலையாக உள்ளது என கூறியிருந்தது. இதற்கான விளக்க மனுவை தற்போது வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், நீரி (என்.இ.இ.ஐ) எனப்படும் தேசிய சுற்றுசூழல்,பொறியியல் நிறுவனம் 2011 யில் நடத்திய ஆய்வில் ஸ்டெர்லைட் ஆலையால் எந்த பாதிப்பும் இல்லை என அறிக்கை அளித்துள்ளது. அதேபோல் ஆலையை இயக்கவேண்டும் என ஒன்றரை லட்சம் பேர் ஆலையை திறக்க ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் எந்த ஆவண ஆதாரங்களும் இல்லாமல் அரசு ஆலையை மூடியுள்ளது என கூறப்பட்டுள்ளது. மேலும் நடந்த துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோரை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலையை அரசு மூடியுள்ளது எனவும் வேதாந்தா குற்றம்சாட்டியுள்ளது.
நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் இன்று பதில் மனுதாக்கல் செய்துள்ளது வேதந்தா.