கோவை காந்திபுரம் நூறடி ரோட்டில் உள்ள பிரபல நகைக்கடையில் உள்ளே சென்ற மர்ம நபர் 200 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கோவை மாநகர துணை காவல் ஆணையர் சண்முகம் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடைக்குள் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, நள்ளிரவு 1.30 மணிக்கு அடையாளம் தெரியாத நபர் கடைக்குள் நுழைந்து நகைகளை திருடியது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட கடையில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது பேசிய காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், 'இரண்டு கிலோ தங்கம் மற்றும் பிளாட்டினம், வைரம் களவு போனதாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து புகார்தாரர் தரப்பில் நான்கு கிலோ 600 கிராம் தங்கம், பிளாட்டினம், வைரம் தவிர வெள்ளி சுமார் 700 கிராம் வெள்ளி திருட்டுப் போயுள்ளதாக புகார் கொடுத்துள்ளார்கள். இவை எல்லாமே புலன் விசாரணையில் இருந்து வருகிறது. வழக்கில் முக்கிய குற்றவாளியான தர்மபுரியை சேர்ந்த விஜய் இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட விஜய் அவருடைய மனைவியுடன் சேர்ந்து இந்த கொள்ளைக்கு திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. விஜயின் மனைவி நர்மதாவிடம் இருந்து மூன்று கிலோ தங்கம், பிளாட்டினம், வைரம் கைப்பற்றப்பட்டுள்ளது.
விஜய் தலைமறைவாக உள்ளார். அவரை கண்டுபிடிப்பதற்காக ஐந்து தனிப்படைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கூடிய விரைவில் அந்த நபர் கைது செய்யப்படுவார். புலன் விசாரணை தொடர்ந்து நடைபெறும். இந்த வழக்கில் புகார் தார்களிடமிருந்து பெறப்பட்ட புகாரில் கொடுக்கப்பட்டுள்ள நகைகளின் விபரங்களும் கேட்கப்பட்டுள்ளது. சரியான அளவு எவ்வளவு என்பதை தெரிந்து கொள்வதற்காக முழு விவரங்கள் கேட்கப்பட்டிருக்கிறது. இதில் இன்னும் கைப்பற்றப்பட வேண்டிய நகை இருக்கிறது. விஜய் என்ற அந்த நபரை பிடித்து மீதமுள்ள நகைகள் மீட்கப்படும்'' என்றார்.