Skip to main content

கரூர் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா! 

Published on 14/05/2022 | Edited on 14/05/2022

 

Karur Mariamman Temple Plastering Ceremony!

 

கரூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் வைகாசி திருவிழா ஆண்டுதோறும் மே மாதத்தில் நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா வைரஸ் பரவல் காரணமாக திருவிழாவை நடத்த இயலாமல் போனது. தமிழக அரசு அண்மையில் அனைத்து கட்டுப்பாடுகளையும் விலக்கிக் கொண்டதின் பேரில் நடப்பாண்டு மாரியம்மன் திருக்கோவில் வைகாசி பெருவிழா கடந்த 8ஆம் தேதி கம்பம் நடும் விழாவுடன் துவங்கியது.

 

இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு துவங்கி இன்று அதிகாலை 4 மணி வரை பூச்சொரிதல் விழா கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை, ராயனூர், வெங்கமேடு, பசுபதிபாளையம், காந்திகிராமம், வேலுச்சாமிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 48 வாகனங்களில் பல்வேறு அம்மன் அவதாரங்களை வெளிப்படுத்தும் வகையில் சுவாமி சிலைகள் அலங்கரிக்கப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக பேருந்துநிலையம் ரவுண்டானா வந்து சேர்ந்து, கரூர் ஜவகர் பஜார், வாங்கல் சாலை வழியாக மாரியம்மன் கோவிலை சென்றடைந்தது.


இந்த நிகழ்ச்சியில் அம்மன் அலங்காரம், சமயபுரம் மாரியம்மன் அலங்காரம், நவக்கிரக நாயகி அலங்காரம், நாகம்மன், பத்ரகாளியம்மன், வேப்பிலை அம்மன் போன்ற பல்வேறு வடிவங்களில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அழைத்து வரப்பட்டபோது, பக்தர்கள் பரவசத்துடன் கண்டுகளித்தனர். மேலும், கடவுள்கள் வேடமணிந்த நாடக கலைஞர்கள் அபிநயம் பிடித்து நடனமாடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.


இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதால் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி இருந்தனர். 20க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இரவு 10 மணியிலிருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து அலங்கரித்த வாகனத்தில் புறப்பட்டு பூத்தட்டு ரதங்கள் கோவில் வளாகத்தை அதிகாலை வரை வந்தடைந்தது. வழி நெடுகவும் பக்தர்கள் அளித்த மலர்களை சேகரித்து மாரியம்மனுக்கு மலர்களால் பூச்சொரிதல் விழா இனிதே நடைபெற்றது. இந்நிகழ்ச்சியைக் கண்டு களித்திட கரூர் மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கரூர் நகரத்துக்குள் பல்வேறு இடங்களில் இருந்து சாமி தரிசனம் செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்