சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு மற்றும் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, ஐ.பெரியசாமி, சக்கரபாணி மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல் ஓதுவார்கள், பூசாரிகள், பட்டாச்சாரியர்களுக்கு புத்தாடை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் துவக்கிவைத்தார். தமிழகம் முழுவதும் உள்ள ஓதுவார்கள், பூசாரிகள், பட்டாச்சாரியர்களுக்கு புத்தாடை வழங்க 14 கோடி ரூபாய்க்கு உடைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 12 பேருக்கு முதல்வர் புத்தாடை வழங்கினார்.
பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளன. சுமார் 2.15 குடும்பங்களுக்கு ரூபாய் 1,088 கோடி செலவில் பொங்கல் சிறப்புத் தொகுப்பு பை இன்று முதல் வழங்கப்படவுள்ளது. மேலும், பொங்கல் பரிசுப் பொருட்கள் விநியோகம் காரணமாக, நியாய விலைக்கடைகள் ஜனவரி 7-ஆம் தேதி வழக்கம் போல் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.