திருவண்ணாமலை – வேலூர் – காஞ்சி சாலை இணையும் இடத்தில் அண்ணா நுழைவாயில் மேற்குப்புறம் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மறைந்த கலைஞரின் எட்டு அடி உயர வெண்கலத்தால் செய்யப்பட்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. கிரிவலப் பாதையில் நாத்திகருக்கு சிலைவைத்தால் கிரிவலம் வரும் லட்சக் கணக்கான பக்தர்கள், ஆன்மீகவாதிகள் மனம் புண்படும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் ஒருவர். அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நாத்திகருக்கு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சிலை எதற்கு எனக் கேள்வி எழுப்பினார் பாஜக தேசிய நிர்வாகியான எச்.ராஜா.
கலைஞர் நாத்திகராக இருந்தாலும் ஆன்மீகவாதிகளையும், ஆன்மீக நம்பிக்கையாளர்களையும் வெறுத்தவரல்ல. அதனால்தான் அவரை தேடிவந்து சந்தித்தார்கள் புட்டர்பதி சாய்பாபாவும், கேரளா அமிர்தானந்தமாயி, திருப்பதி திருமலை வெங்கடேச பெருமாள் கோவில் அர்ச்சகர்கள். அரசியல் செய்யாத ஆன்மீகவாதிகளுக்கும், பொதுமக்களுக்கும் நன்கு தெரியும் ஓடாத திருவாரூர் ஆழித் தேரை ஓடவைத்தவர் கலைஞர் என்பது. அப்படிப்பட்ட கலைஞர் தான் திருவண்ணாமலை கோவிலை காப்பாற்றியவர் என்பது இன்று பலருக்கு தெரிவதில்லை.
2002ம் ஆண்டு, இந்திய ஒன்றியத்தை பாஜக ஆட்சி செய்துகொண்டு இருந்தது. பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் தொல்பொருள் துறை அமைச்சராக இருந்தவர் ஜஸ்வந்த்சிங். கிரிவலப்பாதையில் உள்ள பிரபல ஆசிரமத்தின் நிகழ்ச்சிக்கு வந்தவரிடம், அண்ணாமலையார் கோவில், 14 கி.மீ சுற்றளவுள்ள கிரிவலப்பாதை, 2663 அடி உயரம் உள்ள மலையை தொல்பொருள் துறை கையகப்படுத்தவேண்டும் என மனு தந்தது அந்த ஆசிரமம். கோவிலை வந்து பார்வையிட்டவர், அண்ணாமலையாரை தரிசனம் செய்தார். டெல்லி சென்ற ஒன்றிய அமைச்சர், அண்ணாமலையார் கோவிலை தொல்பொருள்துறை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பினை வெளியிட செய்தார். இதுகுறித்து மக்கள் கருத்து சொல்லலாம் என்றும் அறிவிப்பு வெளியானது.
கோவில் தொல்பொருள்துறை கட்டுப்பாட்டுக்குள் சென்றால், பூஜை விவகாரம் முதல் அனைத்திலும் ஒன்றிய அரசின் அதிகாரிகள் ஒப்புதல் இல்லாமல் சிறு துரும்பையும் கோவிலுக்குள் நகர்த்தமுடியாது என அனைத்து பாதகங்களும் மக்களிடம் பரவியது. இதனால் அதிர்ச்சியான மக்கள், தன்னெழுச்சியாக எதிர்ப்புக்காட்டினர். கோவில் மீட்புக்குழு உருவாக்கப்பட்டு அனைத்து சமயத்தினரும் இணைந்து அண்ணாமலையார் கோவிலை பாதுகாக்க உண்ணாவிரதம், மனிதசங்கிலி, ஆர்ப்பாட்டம், போராட்டம் எனத் தொடர்ச்சியாக நடத்தினர். தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றதில் வழக்கு தொடுக்கப்பட்டது. மக்கள் போராட்டம், சட்ட போராட்டம் என ஒருசேர நடக்க துவங்கியது.
2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தல் பிரச்சாரத்துக்காக திருவண்ணாமலை நகருக்கு வந்தார் திமுக தலைவராக இருந்த கலைஞர். எங்கள் கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தால், எத்தனை தடைகள் வந்தாலும் அதனை உடைத்து திருவண்ணாமலை கோவிலை மீட்டு தருவேன் என மக்கள் முன்பு வாக்குறுதி அளித்தார். காங்கிரஸ் தலைமையிலான திமுக கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சியைப் பிடித்தது. பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கலைஞர் வலியுறுத்தி, அண்ணாமலையார் கோவிலை தொல்பொருள் துறை கையகப்படுத்தும் அறிவிப்பினை திரும்ப பெறவைத்தார். இதற்காக திருவண்ணாமலை நகர மக்கள் சார்பாக அவருக்கு நன்றியும் தெரிவித்தனர். போராட்டக்குழு, ஆன்மீகவாதிகள் கலைஞரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். நீதிமன்றம் கோவில் வளர்ச்சிக்காக குழு அமைத்து உத்தரவிட்டது. ஒன்றிய அரசின் தொல்பொருள் துறை கட்டுப்பாட்டுக்குள் செல்லவிருந்த கோவிலை மீட்டவர் கலைஞர். அதுமட்டுமல்ல,1988ல் அன்றைய வடாற்காடு அம்பேத்கர் மாவட்டத்திலிருந்து திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் பிரிக்கப்பட்டது.
பிரிக்கப்பட்ட மாவட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் கட்ட முடிவு எடுத்தபோது, அதிகாரிகள் கிரிவலப்பாதையில் அரசு கலைக்கல்லூரி எதிரே கட்ட முடிவு செய்து கோப்புகள் தயாரித்து அனுப்பினர். இசையமைப்பாளர் கங்கை அமரன் மற்றும் ஆன்மீகவாதிகள் கோரிக்கையை ஏற்றுக் கிரிவலப்பாதையில் அமைய இருந்த ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தை இடமாற்றம் செய்து உத்தரவிட்டு நடைமுறைப்படுத்தினார். அந்த கலைஞரின் சிலைதான் தற்போது திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையைப் பார்த்தபடி, நகர எல்லையில் அமைக்கப்பட்டுள்ளது.