தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்துடன் இணைந்த தொல்லியல் கழகம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவகம் இணைந்து திருவண்ணாமலை நகரில் தொல்லியல் கழகத்தின் 28வது ஆண்டு விழாவினை ஜீலை 21 மற்றும் 22ந்தேதி நடத்தியது. இந்த நிகழ்வுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக வந்து கலந்துக்கொண்டனர்.
விழாவில் நீதிபதி கிருபாகரன் கலந்துக்கொண்டு பேசும்போது, இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான மொழிகளில் முதன் முதலில் தோன்றிய மொழி தமிழ் மொழி என ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. அகழ்வாராய்ச்சிகள் அதற்கான தமிழ் எழுத்துவடிவங்களை ஆதாரங்களாக தந்துள்ளன. தமிழர்களாகிய நாம் முதலில் நம் அருமை பெருமைகளை முதலில் அறிந்துக்கொள்ள வேண்டும். தமிழர்களின் தொழில் நுட்ப அறிவுக்கு சான்று கல்லணை. நம்முடைய பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் கிடைத்தால் அது சாமிச்சிலை என நினைத்து விட்டுவிடக்கூடாது. சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போது தான் நமது வரலாறுக்கான ஆதாரங்கள் பாதுகாக்கப்படும் என்றார்.
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவகம் என்கிற இணையதளம் மற்றும் கைபேசி செயலியை தொடங்கிவைக்கப்பட்டது. அதோடு சிறப்பாக பணியாற்றும் அறிஞர்களுக்கு விருதும், சான்றிதழும் வழங்கப்பட்டன.