லயோலா கல்லூரிக்கு 64 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த மாநில மகளிர் ஆணையத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி அலுவலரும், மதபோதகருமான சேவியர் அல்போன்ஸ் மீது அதே கல்லூரியில் பணியாற்றிய பெண், பாலியல் புகார் அளித்தார். அதில், சேவியர் அல்போன்ஸ் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் அவர் கூறியிருந்தார். ஆனால், இந்தப் புகார் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து, அந்தப் பெண் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில், தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் அந்தப் பெண் புகார் கொடுத்தார். அந்தப் புகாரை விசாரித்த ஆணையம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.64.3 லட்சம் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், கல்லூரி நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு, நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, லயோலா கல்லூரிக்கு ரூ.64.3 லட்சம் அபராதம் விதித்து தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை வரும் பிப்ரவரி 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.