மாநில உரிமையை அடகு வைத்து ஆட்சி நடத்துகிறார்கள்: மு.க ஸ்டாலின் குற்றச்சாட்டு

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் கடலூர் திமுக மேற்கு மாவட்டச் செயலாளரும், திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினருமான கணேசன் இல்லத் திருமண விழாவை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார்.
அப்போது மணமக்களை வாழ்த்திப் பேசுகையில் முக.ஸ்டாலின்,
எந்த கொம்பனாலும் திராவிட இயக்கத்தை தொட்டுக் கூட பார்க்க முடியாது. தலைவர் கலைஞர் கூறியது போல் ஜனநாயக முறைப்படி திமுக ஆட்சியை பிடிக்கும். கதிராமங்களம் .நெடுவாசல் ,டெல்லியில் விவசாயிகள் போராட்டம் , நீட் தேர்வினால் மாணவர்கள் பாதிப்பு இவைகளைப் பற்றி கவலைப்படாமல் மாநில அரசுகளின் உரிமையை டெல்லியில் அடகு வைத்துள்ள மானங்கெட்ட அரசு தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. மத்திய மோடி அரசு கட்டப் பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கிறது.
குட்கா விவகாரம் சம்மந்தமாக சட்டமன்றத்தில் ஆதாரத்தோடு நிருபித்தும் அப்போதெல்லாம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விஜயபாஸ்கர் அனுமதியோடும், டிஜிபி ராஜேந்திரனுக்கு லஞ்சம் கொடுத்து குட்கா விற்பனை செய்வதாக கூறிய அந்த குட்கா விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்காமல் 40 நாட்கள் கழித்து திமுக உறுப்பினர்கள் 10 பேர் மீது பொய்க் குற்றச்சாட்டுக் கூறி சட்டமன்றத்திற்கு வராமல் தடுத்து விட்டால் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது குறுக்கு வழியில் வெற்றி பெற்று விடலாம் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார் என்று பேசினார்.
காளிதாஸ்