மாநில அரசு இனியும் தலையாட்டிப் பொம்மைதானா?:
கி.வீரமணி
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று நம்பவைத்து மத்திய பிஜேபி அரசு கழுத்தை அறுத்துள்ளது; தமிழக அரசு இனியும் தலையாட்டிப் பொம்மையாகத் தொடரப் போகிறதா என்ற வினாவை எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி. அவ்வறிக்கை வருமாறு:
’’நம்ப வைத்துக் கழுத்து அறுப்பது என்ற வழக்கு நம் நாட்டில் உண்டு. இதற்கு நூற்றுக்கு நூறு பொருத்தமானது- -தமிழ்நாட்டுக்கு நீட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற வழக்கில் மத்திய பிஜேபி அரசு நடந்துகொண்டதாகும்; நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு சட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்காத நிலையில், ஓர் அவசர சட்டம் தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப்பட்டால் அதற்கு ஒப்புதல் தர மத்திய அரசு தயாராக உள்ளது என்று மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சொன்னார். அதனை வழிமொழியும் வகையில் மற்றொரு தமிழக இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் கூறினார். தமிழ்நாடு அரசு அவசரச் சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பிய நிலையில், மத்திய அரசின் கடமை என்ன? அந்த சட்டத்திற்கு அங்கீகாரம் அளிப்பது தானே சரியானது - அறிவு நாணயம் கூட!
அவசர சட்டத்தில் மேலும் பல தகவல்கள் தேவை என்று மத்திய அரசு சொன்ன நிலையில் அதனை நம்பி தேவையான தகவல்களையும் தந்தது தமிழ்நாடு அரசு.
கடந்த 17ஆம் தேதி தமிழகத்தின் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் 5 நாள்களுக்குள் கருத்தை மாற்றிக் கொண்டதன் மர்மம் என்ன? பிஜேபி தலைவர் அமித்ஷாவின் தமிழக வருகை ரத்து செய்யப்பட்டது ஏன்? ஏன்?
கடந்த 17ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு வந்தபோது கூட தமிழ்நாடு அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை நாங்கள் ஏற்கவில்லை என்று மத்திய அரசு சார்பில் சொல்லப்படவில்லை. இவ்வழக்கில் மத்திய அரசு சார்பில் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார். நீட் அவசர சட்டத்திற்கு கோர்ட் தடை விதிக்க முடியாது என மத்திய - மாநில அரசுகள் வாதாடின.சட்டச் சிக்கல் ஏதும் இல்லை என்பதால், அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய அரசு கூறியது.
சட்டத்திற்கு உட்பட்டே அவசர சட்டம் கொண்டு வரப்பட்டதாக தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்ன சொன்னார்கள்? நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவர்கள் என இரு தரப்பினரும் பாதிப்படையாத வகையிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் செவ்வாயன்று அந்தத் திட்டத்தோடு வருமாறும் உத்தரவிட்டனர். அதன்படி ஒரு திட்டம் உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்டதா? உச்சநீதிமன்ற நீதிபதிகளும் அது குறித்து கேள்வி எழுப்பாதது அதைவிட ஆச்சரியமும் அதிசயமும் ஆகும்.
இதைப்பற்றி எல்லாம் ஒரு வார்த்தையும் பேசாமல் வழக்கு விசாரணை தொடங்கிய முதல் நிலையிலேயே, மத்திய அரசின் சார்பில் ஏற்கனவே ஒப்புக்கொண்டவைகளுக்கு முற்றிலும் எதிராக, அதிர்ச்சியூட்டும் வகையில் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதல் இல்லை என்று சொன்ன அந்த மாத்திரத்திலேயே அதனை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டு வழக்கு முடிக்கப்பட்டது அசாதாரணமானது அதிர்ச்சிக்குரியது.
எதிர் மனுதாரர் வழக்குரைஞருக்கு ஒரு வாய்ப்பும் அளிக்கப்படாமல் வாயடைத்ததை எல்லாம் பார்க்கும் பொழுது சமூகநீதி என்றாலே இந்தக் காலகட்டத்தில் அதிகாரம் படைத்தவர்களுக்கு உகந்ததாக இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.
தமிழ்நாடு அரசு தலையாட்டி பொம்மையாகத்தான் இருக்கப் போகிறதா?
தமிழ்நாடு அரசு தன் இயலாமையை ஒப்புக் கொள்கிறதா? இன்னும் எத்தனை நாளைக்குத் தலையாட்டிப் பொம்மையாக இருக்கப் போகிறது? சமூகநீதியில் தவறிழைத்தவர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் கற்பித்த வரலாறை மறக்க வேண்டாம்.
ஒரு மாநிலத்திற்கு விதிவிலக்குக் கேட்டால் மற்ற மாநிலங்களும் கேட்பார்களே என்ற கேள்வியில் அர்த்தம் இருக்கிறதா? மற்ற மாநிலங்கள் கேட்காததாலேயே தமிழ்நாடு அரசு கேட்கக்கூடாது என்பது சட்டப்படியான கேள்வியா? இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் 50 சதவிகிதத்துக்கு மேல் 69 சதவீத இடஒதுக்கீடு அரசமைப்புச் சட்ட ஒன்பதாவது அட்டவணை பாதுகாப்போடு வலிமையாக இருக்கிறதே, அத்தகைய ஒரு மாநிலம் சமூகநீதியிலே இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருந்து உரத்த குரலில் ஒலிக்கிறது என்று தானே எடுத்துக் கொள்ள வேண்டும்.
உச்சநீதிமன்றம் மற்றும் மத்திய அரசும் கூறிய கருத்தையே ஒப்புக் கொள்வதாக இருந்தால் கடந்த ஆண்டு இதே பிரச்சினையில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டதே அது எப்படி?
கடந்த ஆண்டு சொல்லப்பட்ட அதே காரணம் இப்பொழுதும் தொடர்கிறதா இல்லையா? நீட் வினாத்தாள்கள் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபாடானது தவறு சமநீதியாகாது என்று ஒப்புக் கொண்ட உச்சநீதிமன்றம் அதன் அடிப்படையில் நீட்தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்திருக்க வேண்டாமா?
இதே உச்சநீதிமன்றம் 2013இல் என்ன தீர்ப்பு வழங்கியது? தலைமை நீதிபதி அல்தாமஸ்கபீர் தலைமையில் நீதிபதி விக்ரமஜித் சென் மற்றும் ஏ.ஆர்.தவே அடங்கிய அமர்வில் பெரும்பான்மை நீதிபதிகள் என்ன தீர்ப்புக் கூறினார்கள்? இந்திய அரசமைப்புச் சட்டம் 19,25,26,29,30 பிரிவுகளின்படி இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு தேர்வு நடத்தும் அதிகாரம் இல்லை என்று சொல்லப்படவில்லையா?
2013 இல் ஒரு சட்டம் 2017 இல் மாறான சட்டமா? சமூகநீதி மறுக்கப்பட்ட மக்கள் மத்தியில் இந்தக் கேள்வி எழுந்து நிற்கிறது. ஆனால் ஒன்று சமூகநீதிக்கு எதிராக எந்த அதிகாரபீடம் நிமிர்ந்து நின்றாலும் வீதியில் திரளக்கூடிய பெரும்பான்மை மக்களுக்கான சமூகநீதியே வென்று தீரும்!
இதற்கு முழுக் காரணமான இன்றைய அதிமுக எடப்பாடி அரசும், மத்திய அரசும் கூட்டாக இப்படி நமது மருத்துவக் கல்லூரிகளில் மற்ற மாநிலத்தவருக்கு கதவுகளை அகலமாகத் திறந்து, இந்த பிள்ளைகளின் வயிற்றில் அடிக்கலாமா? இதற்குப் பிறகும் பாஜக ஆட்சியை பாராட்டுவதா? இவர்களுக்கு எதிர்காலத்தில் தக்க நேரத்தில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள் என்பது உறுதி!
தீர்ப்புகள் திருத்தப்படும்
இந்த அடிப்படையில் எத்தனையோ சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன, தீர்ப்புகளும் திருத்தப்பட்டுள்ளன! நீட் எதிர்ப்பிலும் வெற்றி பெறுவோம் என்பதில் அய்யமில்லை.
தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் வலியுறுத்திய சமூக ஜனநாயகம் என்பதற்கும் அர்த்தம் அதுவாகத்தான் இருக்க முடியும்.’’