தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இளைஞர் நலம், திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கம், ஜி.டி.என் மருத்துவக் கல்லூரி (இயற்கை மருத்துவம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மையம்), திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து கரோனா மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாநில அளவிலான மினி மாரத்தான் போட்டியை இன்று (21/11/2021) நடத்தியது.
திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் தொடங்கிய மினி மாரத்தான் போட்டியைமாவட்ட ஆட்சியர் விசாகன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் மாவட்ட காவல்துறை எஸ்.பி. ஸ்ரீனிவாசன், ஜி.டி.என். கல்லூரி நிர்வாக இயக்குநரும், தரணி குழும தலைவருமான டாக்டர் ரத்தினம், மாவட்ட தடகள சங்கத் தலைவர் துரை, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாரத்தானாது ஜி.டி.என் சாலையில் தொடங்கி நாகல்நகர், கிழக்கு ரதவீதி, மேற்கு ரதவீதி, பழனிரோடு உள்பட மாநகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாவட்ட விளையாட்டு அரங்கில் நிறைவடைந்தது. மாணவர்களுக்கு 11.5 கிலோமீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 5 கி.மீ. தூரமும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
மாரத்தானில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் மாணவர்கள் பிரிவில் முதலிடத்தை ஒசூரைச் சேர்ந்த நஞ்சுண்டப்பா, இரண்டாவது இடத்தை ராஜபாளைத்தைச் சேர்ந்த மாரிசரத், மூன்றாவது இடத்தை ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த குணாளன் மற்றும் மாணவிகள் பிரிவில் முதலிடத்தை மதுரை சேர்ந்த கவிதா, இரண்டாவது இடத்தை பொள்ளாச்சி திவ்யா, மூன்றாவது தென்காசி ஐஸ்வர்யா ஆகியோர் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.