Skip to main content

நாடித்துடிப்பை இழந்த சிறுமியை உயிர்பிழைக்க வைத்த மருத்துவ குழுவினர்!

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

The medical team that saved the life of the girl who lost her pulse

 

திருச்சி லால்குடியை அடுத்த பூவாளுர் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரின் மகள் தீபிகா(12). இவர் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த போது மழைநீர் தேங்கியிருந்த தண்ணீரில் காலை வைத்துள்ளார். அப்போது மின்கம்ப எர்த் வயர் வழியாக மின்கசிவு ஏற்பட்டு அந்த தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்ததால், மின்சாரம் தாக்கப்பட்ட சிறுமி தீபிகா தூக்கி வீசப்பட்டார். அக்கம்பக்கத்தினர் அவரை மரக்கட்டை உதவியுடன் சிறுமியை அப்புறப்படுத்தியுள்ளனர்.

 

நாடித்துடிப்பு இல்லாத நிலையில் சிறுமியைத் தூக்கிக்கொண்டு  பதறி அடித்து லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்குச் சென்றுள்ளனர். அங்கு அரசு பணியில் இருந்த சரவணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் நெஞ்சை கடுமையாக அமுக்கி சுவாசம் கொடுக்க முயற்சித்துள்ளனர். ஆனாலும் சிறுமி சலனமற்று கிடந்ததால், ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுக்க முடிவு செய்தனர். டிஃபிபிரிலேட்டர் (Defibrillator) கருவியின் உதவியுடன் ஷாக் கொடுக்கப்பட்டது. 3 முறை ஷாக் கொடுக்கப்பட்டும் சிறுமியின் உடலில் எந்தவித சலனமும் இல்லாமல் இருந்துள்ளது.

 

The medical team that saved the life of the girl who lost her pulse

 

மருத்துவ குழுவினர் நம்பிக்கை இழந்த நிலையில் டாக்டர் சரவணன் நம்பிக்கை தளராமல் 4, 5 வது முறை ஷாக் கொடுத்துள்ளார். ஆச்சர்யப்படத் தக்க வகையில் சிறுமி மூச்சு விட ஆரம்பித்துள்ளார். இதனைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த மருத்துவ குழுவினர் அவருக்கு ஆக்சிஜன் கொடுத்து ஓரளவு சுவாசத்தை சீராக்கினர். அதனை தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் உதவியுடன் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமியின் நின்று போன இதயத்தை துடிக்க வைத்த அரசு மருத்துவக் குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

 

 


 

சார்ந்த செய்திகள்