தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. அந்த வகையில், மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தியுள்ளது.
இருப்பினும் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சென்னை பெருநகர மாநகராட்சி உள்பட அனைத்து மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில் உள்ள அழகு நிலையங்கள், சலூன்கள். இயங்க அனுமதி இல்லை. உணவகங்கள், தேநீர் கடைகளில் பார்சல் சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெரிய கடைகள், வணிக வளாகங்கள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் இயங்க அனுமதி இல்லை. அனைத்து வழிப்பாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதியில்லை. பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கை கூடங்கள், பார்கள் இயங்க அனுமதி இல்லை என்று தமிழக அரசு நேற்று (24/04/2021) அறிவித்திருந்தது. இந்த புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் நாளை (26/04/2021) அதிகாலை 04.00 மணி முதல் அமலுக்கு வரும் என அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இன்று (25/04/2021) முழு ஊரடங்கு என்பதால், மதுப்பிரியர்கள் நேற்று (24/04/2021) டாஸ்மாக் கடைகள் முன் குவிந்து மது பானங்களை வாங்கிச் சென்றனர். இதனால் தமிழகத்தில் நேற்று (24/04/2021) ஒரே நாளில் ரூபாய் 252.48 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடந்துள்ளது. அதிகபட்சமாக சென்னை மணடலத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூபாய் 58.37 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக, மதுரை மண்டலத்தில் ரூபாய் 49.43 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூபாய் 48.57 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூபாய் 47.79 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூபாய் 48.32 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.