சேலம் மாவட்டம் மேட்டூர் ராமன் நகரைச் சேர்ந்தவர் லட்சுமிநரசிம்மன் (50). தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மாணவர்கள் சங்க மாநிலத் தலைவராக இருந்தார். இவர், சேலம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைத்துறை பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தமிழகம் மு-ழுவதும் அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வாரம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர் லட்சமி நரசிம்மன், சேலத்தில் போராட்டங்களுக்கு தலைமையேற்று நடத்தினார். மற்ற மாவட்டங்களிலும் மருத்துவர்களை போராட்டத்திற்கு ஒன்று திரட்டினார்.
இதையடுத்து, போராட்டத்தில் தீவிரமாக செயல்பட்ட 120 மருத்துவர்கள் கட்டம்கட்டப்பட்டு வெவ்வேறு ஊர்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். அப்போது, தர்மபுரி அரு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் லட்சுமிநரசிம்மனும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இது, மருத்துவர்கள் மீதான பழிவாங்கல் நடவடிக்கை எனக்கூறி, இடமாற்றம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பழைய இடத்திற்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை (பிப். 7) காலையில் அவர் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரி-ழந்தார். இச்சம்பவம் மருத்துவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சக மருத்துவர்கள் கூறுகையில், ''கடந்த பல ஆண்டுகளாக மருத்துவர்களின் உரிமைகளுக்காக பல போராட்டங்களை முன்னின்று நடத்தியவர் லட்சுமிநரசிம்மன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, 15 அம்ச கோரிக்கைகளுக்காக அவர் வழிநடத்திய நடத்திய போராட்டம் அமைச்சர்கள், உயரதிகாரிகள் வரை பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்காக அவரை பழிவாங்குவதற்காக அவரை தர்மபுரி, ராமநாதபுரம் என பணியிடமாற்றம் செய்து வந்தனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம். அதேநேரம் அவருக்கும் புகைக்கும் பழக்கமும் இருந்து வந்தது,'' என்றனர்.