முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் எழுதிய ‘மாநில சுயாட்சி’ நூல் அனைவரும் படித்திட வேண்டிய ஒன்று என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 90வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுக்கிறது. இதையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மதுரை மாவட்டம் சிலைமான் அருகே அமைந்துள்ள அண்ணா மண்டபத்தில் முரசொலி மாறன் உருவப் படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “நாளெல்லாம் நம்மை இயக்கிடும் நூற்றாண்டு நாயகர் கலைஞரின் மனசாட்சியென வாழ்ந்திட்ட முரசொலி மாறனின் 90 ஆவது பிறந்தநாள் இன்று. மதுரை சிலைமானில் கலைஞரால் 1952இல் திறந்து வைக்கப்பட்ட திமுக அலுவலகத்தில், மரியாதைக்குரிய முரசொலி மாறன் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். கொள்கைக் கருவூலமான முரசொலி மாறன் எழுதிய மாநில சுயாட்சி நூல் அனைவரும் படித்திட வேண்டிய ஒன்று. முரசொலி மாறன் அவர்களது புகழ் போற்றுவோம். அவரது கருத்துகளை இளைய சமுதாயத்துக்குப் பயிற்றுவிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.