தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் அலுவலகங்களை புறக்கணித்துவிட்டு ஊராட்சி எழுத்தாளர்களுக்கு சம்பள உயர்வு, உள்ளாட்சி தேர்தல் உடனே நடத்தப்படவேண்டும், காலிப்பணியிடங்களை உடனே நிரப்பப்படவேண்டும், பொறியாளர்கள் அனைவருக்கும் சமமான ஊதியம் வழங்கவேண்டும் என்கிற 26 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஜீலை 3ந்தேதி முதல் ஒருவாரமாக வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த போராட்டம் இன்றும் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்றது.
திருவண்ணாமலை நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் 300க்கும் மேற்பட்டோர் அண்ணா சிலை முன்பு கூடி அரசை நோக்கி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டம் செய்தவர்களை கைது செய்த போலீஸார் அவர்களை 4 பேருந்துகளில் ஏற்றி தனியார் திருமண மண்டபங்களில் அடைத்துவைத்துள்ளனர். கைதான தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரை இந்த வேலை நிறுத்தப்போராட்டம் தொடரும் என்றனர்.
ஊரக வளர்ச்சித்துறையில் நடைபெறும் இந்த போராட்டத்தால் பி.டி.ஓ அலுவலகங்கள் காலியாக உள்ளன. இதனால் புதிய வீடுக்கட்ட அனுமதி பெறவும், மனை அங்கீகாரம் பெறவும், தொகுப்பு வீடு கட்டியுள்ள பயனாளிகள் தொகை வாங்க முடியாமல் தவிக்கின்றனர். ஓப்பந்ததாரர்கள் வேலை செய்துவிட்டு பணத்துக்காக காத்துக்கொண்டுள்ளனர். தொடர்ச்சியாக 3ந்தேதி முதல் வேலைநிறுத்தப்போராட்டம் நடைபெறுவதால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிர்வாக பணிகள் பாதிப்பு, பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் இந்த வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான எந்த முயற்சியும் பெரியளவில் எடுக்காமல் அரசும் மவுனம் காக்கிறது.