பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்தின் பல்வேறு கிராமங்களில் நேற்று (14.07.2021) சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நல்ல மழை பெய்தது. இந்நிலையில், நாட்டார்மங்கலம் கிராமத்தில் பெய்த கனமழையால் வீடுகளில் இருந்தும் வீதிகளில் இருந்தும் வரும் மழைநீர், கால்வாய் இல்லாததால் மாரியம்மன் கோயில் முன்பு குளம்போல் தேங்கி நிற்கிறது.
இதனால் அந்தப் பகுதியில் குடியிருக்கும் குடியிருப்புவாசிகள் அத்தியாவசியத் தேவைக்காக வெளியே செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்தக் கோயில் அருகே ஒரு பள்ளிக்கூடம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தேங்கிய மழைநீரில் நடந்து செல்வதால் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இரு சக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை ஒட்டிச் செல்லும்போது தேங்கிய மழை நீரால் சிறுசிறு விபத்துகள் நடக்கின்றன. மாவட்ட நிர்வாகமும் ஊராட்சி நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.