அந்தக் காலத்தில் மாதம் மூன்று முறை மழை பெய்த காரணம் தெரியுமா? எல்லா உயிர்களிடத்திலும் கோபம் போன்ற கடுங்குணங்களை வெளிப்படுத்தாமல், அறவழியில் நடப்பவனே அந்தணன். வேதம் ஓதும் வேதியர்களுக்காக ஒரு மழை; நீதி நெறி தவறாத மன்னனுக்காக ஒரு மழை; கற்புடைய மாதருக்காக ஒரு மழை என்று விவரிக்கிறது விவேக சிந்தாமணி. அனுபவத்தால் உணரக்கூடிய இறுதிப்பொருளை, நேருக்கு நேராகத் தெரிந்து காமம், மூன்றுவகை நோய் போன்ற குற்றங்கள் புரியாதவனும், பாவம், பொறாமை, விருப்பம், ஆசை, மோகம் ஆகியவற்றை விலக்கியவனும், ஆடம்பரம், அகங்காரமற்ற நெஞ்சமுடையவனுமாக இருப்பவனே பிராமணன் என்கிறது மனுஸ்மிருதி. மனுதர்மம் எனப்படும் அந்த நூல், ஆணின் உடல் முழுவதும் தூய்மையானது. அதுவும் இடுப்புக்கு மேலே மிகவும் தூய்மையானது. பிரம்மாவின் முகமும் மிகத் தூய்மையானது. பிரம்மாவின் தூய்மையான முகத்திலிருந்து முதலில் தோன்றியவனே பிராமணன் எனவும், அதனால், பிறவியிலேயே அவன் வேதங்கள் பெற்றவனாகிறான் என்றும், அவனே மனிதப் படைப்புகள் யாவற்றிலும் மேலானவன் என்றும் சிலாகிக்கிறது.
இத்தனை சிறப்புக்களைத் தன்னகத்தே கொண்டவர்கள் என என்றோ எழுதி வைத்ததை, அப்படியே ஏற்றுக்கொண்டவர்கள்தான் இன்றும் பிராமணர்களை ‘சாமி’ என்று அழைக்கின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில், உற்சவர் புறப்பாட்டின்போது, தென்கலை, வடகலை என பிரிந்து நின்று, சில சாமிகள் வேதம் ஓதும் வாயிலிருந்து உதிர்த்த வார்த்தைகள் இவை –
“போடான்னா சொல்ற.. பல்லைக் கழற்றி கையில் கொடுத்துடுவேன்.”
“தைரியம் இருந்தா தொடுடா.. நீ ஆம்பளையா இருந்தா தொடுடா.”
“ரெண்டு பேரா இருந்தாலும் வெட்டுவேன்.”
“அன்னைக்கு என்னன்னா.. அவன் என்னை அடிக்கிறான். அதுக்கு நான் அவனை அடிச்சேன்னு கம்ப்ளைன்ட் கொடுக்கிறான்.”
“என்னைக் கையை முறுக்கிட்டு அடிக்க வர்றான்.”
“நீதான மொதல்ல வார்த்தைய விட்ட அன்னிக்கு..”
“என் வயசு என்ன? உன் வயசு என்ன?”
அக்கோவிலில் தடித்த வார்த்தைகள் பேசிய பிராமணர்கள், தங்களுக்குள் ஒருவரை ஒருவர் அடிக்கப் பாய, “என்னாச்சு? கலாட்டாவா?” என்று அங்கே நின்றுகொண்டு சிரிக்கிறார் ஒரு மகளிர் காக்கி. இந்த மோதலை வீடியோ எடுத்து நமக்கு அனுப்பிய ஒருவர் “நன்னா விசாரிங்கோ..” என்று வேண்டுகோள் விடுத்தார்.
“காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் யானைக்கு, பாதம் வைத்த தென்கலை நாமம் போடுவதா? பாதம் இல்லாத வடகலை நாமம் இடுவதா? என்று இருபிரிவினரும் சண்டை போட்டு, லண்டன் கோர்ட்வரை சென்ற வழக்கு 150 வருடங்கள் நடந்தது. அதன் தொடர்ச்சியே இது!” என்றார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் முக்கிய பொறுப்பு வகிக்கும் தென்கலை பிரிவைச் சேர்ந்தவர்.
மேலும் அவர் “இதுவந்து தென்கலை சம்பிரதாயத்துக்கு உட்பட்ட கோவில். மார்கழி மாசம் வந்துட்டாலே வடகலையார் தென்கலையாருக்குள்ள வில்லங்கம் வந்திரும். தை ரெண்டாம் தேதிக்கு அப்புறம் அவாளே விட்ருவா. வேற ஒண்ணுமில்ல. வைணவக் கடவுளான திருமாலைப் போற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள பாசுரங்களை, உற்சவர் முன் எந்தப் பிரிவினர் பாடுவது என்பதில்தான் சண்டை. நீ சேவிக்கவா? நான் சேவிக்கவா?
இதுக்குத்தான் மோதல். ஸ்ரீரங்கத்துலயும் பிரச்சனை இருக்கு. எல்லா வைஷ்ணவ ஆலயங்களிலும் இந்த பேதம் இருக்கு. இதுவந்து காசு பணத்துக்கான சண்டை இல்ல. இதற்கெல்லாம் சட்டம் கிடையாது. ஆதியில என்ன பழக்கவழக்கம் இருந்ததோ, அதை ஃபாலோ பண்ணிக்கிறதுன்னு வரும். இதுல கொஞ்சம் வித்தியாசப்படறப்ப, இவாளுக்குள்ள கருத்து வேறுபாடு வந்திரும். முன்ன மாதிரியில்ல. இப்ப கோத்திரம் பார்க்காம ஒருத்தருக்கொருத்தர் சம்பந்தம் பண்ணிக்கிறா. இந்த ஒரு மாசம் மட்டும் எங்கேயிருந்தோ சாமி வந்த மாதிரி ஆடித்தொலைக்கிறா. இதை யாரும் இங்கே சீரியஸா பார்க்கிறதில்ல. ஏன்னா.. யாரும் அடிச்சிக்கிட்டு சாகப்போறதில்ல.” என்றார் சாதாரணமாக.
சாமியாட்டத்துக்கு மதுரை பாண்டி கோவில் பிரசித்தமானது. ஸ்ரீவில்லிபுத்தூர் சாமிகள் ஆட்டம் வேற லெவல்!