திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களினால் ஆளும் கட்சியினரும் ஸ்ரீரங்கம் பக்தர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா டிசம்பர் 26ம் தேதி தொடங்கியது. 27ம் தேதி பகல் பத்து முதல் திருநாள் துவங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் வந்த உற்சவர் நம்பெருமாள் ஜனவரி 5ம் தேதி மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். 6ம் தேதி பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. ராப்பத்து 8ம் நாளாலில் திருமங்கை மன்னன் வேடுபறி விழா நடந்தது.
நம்பெருமாள் சந்தனு மண்டபத்திலிருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு வையாளி கண்டருள மணல் வெளியில் பெருமாளைத் தூக்கிக்கொண்டு சாமி தூக்குபவர்கள் அங்கும் இங்கும் ஓடியாடி விளையாடுவது வழக்கம். இதுபோல் ஓடியாடியபோது சாமி தூக்கிச் செல்பவர்களில் ஒருவரது கால் இடறி தடுமாறி உட்கார்ந்துவிட்டார். அவர் மேல் விழுந்துவிடக்கூடாது என மற்றவர்கள் பேலன்ஸ் செய்ய முயன்றனர். அப்போது தங்க குதிரை வாகனத்தின் வலதுபுறம் இருந்த மூங்கில் கம்பம் முறிந்து சேதமானது.
முறிந்த கம்பத்தை மாற்ற முயற்சி செய்து கொண்டிருந்தனர். இதில் இடதுபுறமிருந்த மூங்கில் கம்பமும் முறிந்துவிட்டது. இதனால் பெருமாள் கீழே சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது சாமி தூக்குபவர்கள் பெருமாளை கீழே விழாமல் பத்திரமாக தாங்கிப்பிடித்தனர். இதனால் பக்தர்கள் "ரங்கா ! , ரங்கா !" என பலத்த கோஷமிட்டு கதறினர். பெருமாள் கீழே சரிந்ததால் சிறிய வெள்ளி ப்பல்லக்கில் பெருமாளைத் தூக்கிச் சென்று ஆயிரங்கால் மண்டபத்தில் பரிகார பூஜைகளை பட்டர்கள் செய்தனர்.
இந்த சர்ச்சை அடங்குவதற்குள், கோவிலில் உள்ள பிரசாத கடை தீப்பிடித்து எரிந்த சம்பவம் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவில் கருடாழ்வார் சன்னதி ஆர்யபட்டாள் வாசல் அருகே உள்ளது பிரசாத கடை.இங்கு நேற்று அதிகாலை 1 மணிக்கு மேல் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கோவில் அந்தப் பகுதி முழுவதும் பரப்பரப்பு தொற்றிக்கொண்டது.
தீ ஜூவாலை கொழுந்து விட்டு எரிந்தது! ஆனாலும் இந்த விபத்து குறித்து ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்திற்கு உடனடியாக தகவல் அளித்து கோவில் ஊழியர்களே தீயை அணைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். இதன் பிறகு ஏறத்தாழ 1 மணி நேரம் கொழுந்து விட்டு எரிந்த தீயை ஊழியர்கள் போராடி அணைத்தனர்! இதில் பிரசாத கடை முழுதும் எரிந்து நாசம் ஆனது தற்போது அதனை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகின்றது!
இரவு நேரம் தீ விபத்து என்பதால் பக்தர்கள் உயிரரிழப்பு தவிர்க்கப்பட்டு உள்ளது! ஏனெனில் பிரசாத கடை அருகே எந்த நேரமும் நூற்றுக்கணக்கானோர் அமர்ந்து பிரசாதத்தை சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள்! பிரசாத கடை அருகில் தான் கோவில் யானை ஆண்டாள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஸ்ரீரங்கம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.