108 வைணவ தலங்களில் முதன்மை தலமாக இருக்கக்கூடிய ஸ்ரீரங்கம் கோவிலுக்கு 51வது ஜீயரை தேர்ந்தெடுக்கும் பணியை அறநிலையத்துறை துவங்கியிருந்தது. ஆனால், சாதாரண அரசு அதிகாரிகள் ஜீயரை தேர்ந்தெடுப்பதா? என்று பலரும் கேள்விகள் எழுப்பினர். ஸ்தலகாரர்கள், தீர்த்தகாரர்கள் என்று அழைக்கப்படும் வைணவர்கள், ஜீயரை ஒரு அலுவலக பணியாளர் போல அறநிலையத்துறை தேர்ந்தெடுக்கக் கூடாது என்று கூறியிருந்தனர்.
ஜீயரை தேர்ந்தெடுக்க, தமிழகத்தில் உள்ள மிக முக்கியமான மூன்று மடங்கள் மூலம் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்களை அந்தந்த மடங்களில் இருக்கக்கூடியவர்கள் தேர்வு செய்து, அதன்பின் சீராக அறிவிக்கப்படுவார்கள் என்பது நடைமுறையில் அறநிலையத்துறை கடைப்பிடிக்கும் விதிமுறைகள் ஆகும். எனவே, தற்போது கரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக இருப்பதால், கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறநிலையத்துறை வெளியிட்டிருந்த அறிக்கைக்கு அறநிலையத்துறை தற்போது தற்காலிகமாக தடை விதித்துள்ளது.
நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்த பிறகு, மீண்டும் ஜீயரை தேர்ந்தெடுக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்ற மறு உத்தரவை அரசு கொடுக்க உள்ளதாகவும், மிக முக்கியமான மூன்று மடங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்டு அந்த மடங்கள் நியமிப்பவர்களைப் பரிசீலித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.