![Srirangam Aranganatha Temple Festival ..!](http://image.nakkheeran.in/cdn/farfuture/osJwv8dncrOj0W1qVEHo-gJLF0Gms2WG_bGftuH9gAk/1611049227/sites/default/files/inline-images/th-1_401.jpg)
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் ‘பூபதி திருநாள்’ எனப்படும் தை தேர் திருவிழாவிற்காக இன்று (19 ஜன.) அதிகாலை கொடியேற்றம் நடைபெற்றது. 10 மாதங்களுக்குப் பிறகு நம்பெருமாள் வீதி உலா இன்று முதல் நடைபெற இருக்கிறது. ‘பூலோக வைகுண்டம்’ என்று அழைக்கப்படுவதும் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி கோவிலில் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான தை தேர் உற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கொடியேற்ற மண்டபம் வந்தடைந்தார், கொடியை அர்ச்சகர்கள் பல்லக்கில் தூக்கி நான்கு வீதிகளிலும் வலம் வந்த பின்னர், அர்ச்சகர்கள் கொடிக்குப் பூஜைகள் செய்யப்பட்டு தனுர் லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இன்று முதல் மாலை நம்பெருமாள் திருச்சிவிகை வாகனம், ஹம்ச வாகனம், யாளி வாகனம், கருட வாகனம், யானை வாகனம், தங்க குதிரை உள்ளிட்ட வாகனங்களில் நம்பெருமாள் எழுந்தருளி வீதி உலா நடைபெற இருக்கிறது.
கொடியேற்ற நிகழ்ச்சியை மக்கள் கோவில் வாசலில் இருந்து கண்டு தரிசித்தனர். கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முக்கிய திருநாட்களில் நம்பெருமாள் வீதி உலா நடைபெறாமல் அனைத்து நிகழ்ச்சிகளும் திருக்கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெற்றது. 10 மாதங்களுக்குப் பிறகு நம்பெருமாள் வீதி உலா இன்று முதல் நடைபெற இருக்கிறது. ஒன்பதாம் திருநாளன்று முக்கிய நிகழ்ச்சியாக தை தேர் உற்சவம் வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் அர்ச்சகர்கள் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.