Skip to main content

   இலங்கைக்கு கடத்த முயன்ற 50 கிலோ கஞ்சா பறிமுதல் 

Published on 04/07/2019 | Edited on 04/07/2019

 


போதைப் பொருள் கடத்தல் என்றாலே தமிழக கடல்வழியாக இலங்கை கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதும், அதே போல தங்கம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் பல நாடுகளில் இருந்தும் இலங்கை கொண்டு வரப்பட்டு அங்கிருந்து கடல் மார்க்கமாக தமிழக கடலோரக் கரைகளுக்கு கொண்டு வந்து கடத்தப்படுவதும் வழக்கமாகிவிட்டது. அதாவது போதை பொருள் மற்றும் தங்கம் கடத்தல்களின் மையமாக இலங்கை செயல்பட்டு வருகிறது. 

 

k

 

மீன்பிடி படகுகளில் இலங்கையிலிருந்தும், இலங்கையிருந்து இந்தியாவுக்கும் கடத்தல் நடக்கிறது. அதாவது விடுதலைப்புலிகள் கடலில் இருந்து ஒதுங்கிய பிறகே இந்த கடல்வழிக் கடத்தல்கள் அதிகரித்துள்ளது. அதற்கு முன்பு விமானங்கள் மூலம் பெண்களையே கடத்தல்களுக்கு அதிகம் பயன்படுத்தி வந்தனர். இந்தியாவில் இருந்து சில பொருட்களை கொண்டு போய் இலங்கையில் கொடுத்துவிட்டு பிறகு அங்கிருந்து இந்தியா திரும்பும் பெண்களை தங்கம் கடத்தலுக்கு புரோக்கர்கள் பயன்படுத்திக் கொண்டனர். விடுதலைப் புலிகள் கடலில் இருந்து ஒதுங்கிய பிறகு கடல்வழிக்கடத்தல்களே அதிகரித்துள்ளது. 


வேதாரண்யம் அருகே அ.தி.மு.க புள்ளியின் மகன் விற்க கஞ்சாவுக்கு ரூ. 3 கோடி வரை பாக்கி இருந்ததால் ஒரு இலங்கை வாலிபரை ஒன்றரை ஆண்டுகள் ஒரு வீட்டுக்குள்ளேயே பூட்டி சிறை வைத்திருந்தனர். அதனை கண்டறிந்த கடலோர புலனாய்வு நுன்னறிவு பிரிவினர் கண்டறிந்து கடலோர காவல் போலிசார் கடந்த மாதம் மீட்டனர். ஆனாலும் கஞ்சா கடத்தல்கள் நிற்கவில்லை.

 

இந்த நிலையில் தான் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற, ரூ 5 லட்சம் மதிப்புள்ள,  50 கிலோ  கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


திருச்சியில் இருந்து தஞ்சாவூர் மாவட்டக் கடற்கரை வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக, கடலோரக் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சேதுபாவாசத்திரம் கடலோரக் காவல்படை ஆய்வாளர் சுபா தலைமையில், சிறப்பு உதவி ஆய்வாளர் மனோகரன், தலைமைக் காவலர் வெற்றிச்செல்வன், காவலர்கள் பகத்சிங், கோபால் ஆகியோர் கிழக்கு கடற்கரை சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

 

அப்போது, சேதுபாவாசத்திரம் அருகே உள்ள பிள்ளையார்திடல் பழைய சோதனைச் சாவடி அருகே, பட்டுக்கோட்டையில் இருந்து கட்டுமாவடி நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசுக் காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் அந்த காரில் ரூ 5 லட்சம் மதிப்புள்ள 50 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. 

 

இதையடுத்து அந்த காரை பறிமுதல் செய்த கடலோரக் காவல்துறையினர், காரில் இருந்த மதுரை எல்லீஸ் நகர் சேகர் (வயது 59), புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் கலந்தர்கனி (வயது 30), இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் (வயது 45) ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
            

சார்ந்த செய்திகள்