திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் கிருஷ்ணமூர்த்தி(74). இலங்கைத் தமிழரான இவர் மீது போலி ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டு தயாரித்துக் கொடுத்தது உள்ளிட்ட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன. திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த இவர் வயது முதிர்வு உள்ளிட்ட காரணங்களால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
இதையறிந்த சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள சக கைதிகள், முறையான சிகிச்சை அளிக்காதது மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்காததால் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்ததாக கூறி அவரது உடலை எடுக்க விடாமல், நீதிமன்றம் விசாரணை நடத்தவேண்டும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய விசாரணை நடத்தப்படும் என முகாம் அலுவலர்கள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி உடல் உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கே.கே நகர் போலீஸார் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.